LIFT நிறுவனத்தினால் வெளியீடு “இருளகல்வு” மற்றும் “நெடுநீரறிவு”

LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இரண்டு விழிப்புணர்வுக் குறும்படங்கள் வெளியீடு!!மட்டக்களப்பில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான LIFT நிறுவனம் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மக்கள் மத்தியில் ஆற்றி வருகின்றது.

அதில் ஒன்றாக “சமூக சகவாழ்வு, சமாதானத்தை கட்டியெழுப்பல், பாலினம், பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள்” எனும் வேலைத்திட்டமும் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி விடயங்கள் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் – கருத்தரங்குகள் நடாத்தப்படுவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரு குறும் படங்களின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு நேற்று 25.02.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மட்டக்களப்பு ஈஸ்ட் லகோன் விடுதியில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வானது LIFT நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீறிகாந்த் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக UNFPA நிறுவனத்தின் தேசிய திட்ட ஆய்வாளர் திருமதி.சாரா சொய்சா, ADT நிறுவன பிரதம நிர்வாக உத்தியோகத்தர் கோட்பிறி யோகராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும் விஷேட விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் LIFT நிறுவன தயாரிப்பில் எடுக்கப்பட்ட இரு குறும் படங்களான “இருளகல்வு” மற்றும் “நெடுநீரறிவு” என்பன காட்சிப்படுத்தப்பட்டதோடு, கலைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் படங்கள் பற்றிய பொதுவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் LIFT நிறுவனமானது பல்வேறுபட்ட மனிதாபிமானப் பணிகளை மாவட்ட செயலகத்துடன் இணைந்து மிகவும் வினைத்திறனாக செயற்படுத்துவதாகவும், இக்குறும்படங்களும் மிகவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிச்சயம் உதவும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!