இளையதம்பி தயானந்தா தொகுத்து வழங்கும் “வாரம் ஒரு வலம்”உலகத் தமிழ் வானொலி நிலையங்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி

தமிழ் வானொலி நிலையங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது .

இலங்கை ஒலிபரப்புத்துறை ஒரு நூற்றாண்டை தொட்டுவிடும் காலம் கிட்ட வருகையில் இந்த கனவை ,பேரவாவை நிறைவேற்றியுள்ளார் சிரேஷ்ட ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா.

“கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்ஹ அவர்களின் அனுசரணையோடு
தயாவின் தனியாளுமைப் பேச்சுத் திறனோடு மீண்டும் ஆரம்பமான வாரம் ஒரு வலம்
மூலம் புலம் பெயர் தேச வானொலிகள் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கின்றன” என்று சிரேஷ்ட ஒலிபரப்பாளர் VN மதியழகன் அவர்கள் பதிவிட்டுள்ளார் .

தொடர்ந்து அவரது பதிவில் கூறுகையில் சங்க காலத்து தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார் செப்பிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்ற ஒப்பில்லா உயர் கோட்பாட்டினை அடிநாதமாக்கி உலகெலாம் பரந்து வாழும் எமது உறவுகளை ஒன்றிணைக்க இலங்கை வானொலி அதன் ஜன்னல்களை அகலத் திறந்துள்ளது.

எனது ஒலிபரப்பு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன் இளையதம்பி தயானந்தாவை இரு கரம் நீட்டி ” வா மகனே ” என்றழைத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க அவர்கள் ஒலிபரப்பு வானில் பதிய பாதை-புதிய யுகம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பில் ஆயிரம் பிறை கண்ட என் பேரன்புக்கும்,பெரு மதிப்புக்கும் உரிய ஹட்சன் சமரசிங்க அவர்களே! தாங்கள் முதன் முதலாக கூட்டுத்தாபன மா அதிபராக பதவியேற்றபோது நான் தமிழ் இயல்,நாடகக் கட்டுப்பாட்டாளராக சேவையாற்றியவேளையில் தயானந்தாவை ஒலிபரப்பில் ஒரு ” உதய சூரியன்” எனக் கண்டேன்.

அவன் உச்சி வானத்தில் பவனி வரும் கட்டத்தில் இட்டமுடன் கூப்பிட்டு உலகத் தமிழர்களின் “உறவுக் குரலாய் ஒலித்திடுவாய்” எனக் கேட்டு அதற்கான பொறுப்பினை நாட்டமுடன் கொடுத்திட்ட தங்களை பாராட்டி மகிழ்கிறேன்.

ஒலிபரப்பில் புதிய சகாப்தம் ஒன்று தோன்றிவிட்டடது. தயா,இலங்கை வானொலிக் கலையகத்திலிருந்துகடந்த சனிக்கிழமை தொடங்கிய வாரம் ஒரு வலம் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,ரொறன்ரொ- மொன்றியேல் Time F.M மற்றும் பி(f)ரான்ஸ் ITBC, ஜேர்மன் ETR ,நோர்வே தேன் தமிழ் நாதம் என்பன ஊடாக உலாச் சென்றபோது நான் கனடாவின் Alberta மாகாணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.செவிமடுக்கமுடியவில்லை.
Toronto திரும்பிய சொற்பவேளையில் link மூலம் கேட்டேன்.

நிந்தன் நேயமான ,நேயர்களுக்கு வாலாயமான குரலில் ஒலித்திட்ட பொருள் பொதிந்த மீள் அறிமுகத்தோடு வாழ்த்துச் செய்திகள் தாங்கிய வலத்தின் ஒரு மணி நேரம் என்னை கடந்த காலத்திற்கு இட்டுச் சென்றது.

நாளை சனிக்கிழமை இரண்டாவது நிகழ்ச்சியை நீ தரப்போகிறாய்.அது சுவிஸ்,பிரிட்டன்- இலண்டன்,ஒஸ்ரேலியா நேயர் செவிகளையும் எட்டப்போகிறதென்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்திடுகிறதே.

எனதினிய நண்பர்களே! சென்னை ஊடக நண்பர் பேராசிரியர் தங்க ஜெய் சக்திவேல் அவர்கள் ” வானொலி ஒலிபரப்பின் வலு ஒரு போதும் குறையடையாமல் இன்னுமின்னும் வலுக்கும்” என தயாவுக்கு நிகழ்ச்சியில் விளக்கிக் கூறிய விதம் என் மனதை வெகுவாக நிறைத்தது.

இலங்கை வானொலியின்”சித்திர புத்திரனார்”- ஊரெழு கனகசூரியர் அவர்களே!
நீங்களும் மீள் எழுச்சி பெற வேண்டிய வேளை பிறந்திருப்பாதச் சொல்கிறது என் மனம்.
புலம் பெயர் தேசங்களில் ஒலிபரப்பு சேவைகளை நடத்தும் என்னவர்களே!
உங்களதும்,உங்கள் அபிமான அறிவார்ந்த நேயர்களினதும் காத்திரமான பங்களிப்பு எல்லோருக்கும் சவால் விடும் தயானந்தவிற்கே ஒரு சவாலாக அமையட்டும்.

சாத்திர,சம்பிரதாயங்களை தகர்த்து உக்கிரமாய் நிகழ்ச்சி ஒலித்துச் செல்லும் என்பதை நாளைய இரண்டாம் நிகழ்ச்சி எடுத்துக் காட்டும் .

தயா!
உனக்கொன்று சொல்லிடுவேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தான பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெயரஞ்சன் யோகராஜா,தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் R.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆகியோரின் உறுதுணை உன்னோடிருக்கும்.

தாய் வானொலியும் சேய் வானொலிகளும் சங்கமிக்க வந்ததே –
வாரம் ஒரு வலம்.
சமூக,அரசியல் பலம் அது தரும்.

இந்த நிகழ்ச்சி மூலம் உலக வானொலி நேயர்களை ஒன்றிணைக்க எமது lankatalkies இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!