(31 .12. 2023 – ஞாயிறு இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய திறந்தவெளி அரங்கில் புத்தாண்டை வரவேற்கும் டான் இன்னிசை இரவு நிகழ்ச்சியில் விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற உள்ளது)
(இதனை ஒட்டி இன்றைய ஈழநாடு பத்திரிகையில் விருது அறிவிப்பு வெளியாகியது. அந்த கட்டுரை வருமாறு)
‘இந்தமண் எங்களின் சொந்த மண்ணென’ இசையால் உலகிற்குணர்த்திய கலைமகன். நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் என உரத்திசைத்த தலைமகன் – மூத்த இசையமைப்பாளர் – இசைவாணர் கண்ணன் என அழைக்கப்படும் முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் டான் தொலைக்காட்சிக் குழுமத்தால் 2023 ஆண்டுக்கான ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றார்.
கருவிகளை இசைப்பவர்களோ இசைக்கோர்வைகளை உருவாக்குபவர்களோ குரலெடுத்துப் பாடுபவர்களோ நிலைத்த இசையாளர்களாக வெற்றிபெறுவதில்லை. இவையாவும் ஒருங்கமைந்து மக்கள் மனங்களில் நிலைபெறுவோரே வரலாற்றில் நிலைத்திருக்கின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்து இசைவானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இசைவாணர் கண்ணன் திகழ்கின்றார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் 29.04.1943 இல் முத்துக்குமாரு இராசம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்த கண்ணன் தனது ஆரம்பக் கல்வியை பெரியபுலம் பாடசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.சி. வகுப்பு வரையும் கற்றார்.
இசைமீதான ஈடுபாட்hல் இசைப்புலவர் சண்முகரத்தினம், சங்கீதபூஷணம் இராஜலிங்கம், சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி, அரியாலை ச.பாலசிங்கம் போன்ற இசைமேதைகளிடம் இசை நுட்பங்களைக் கற்றார். 1960 களில் கண்ணன் இசைக்குழு என்ற பெயரில் ஓர் இசைக்குழுவை உருவாக்கி ஈழத்தின் பல பாகங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். ஹார்மோனியம், கிற்றார், கீ போர்ட், எக்கோடியன், ஷாகிபாஜா, பியானோ, வீணை, தபேலா, மிருதங்கம் போன்ற கருவிகளை இசைப்பதில் வல்லமை பெற்றார்.
1967இல் இடம்பெற்ற தினகரன் விழா இவரது இசைப்பயணத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தேசிய நிலையில் கண்ணன் புகழ்பெற தினகரன் பத்திரிகை வழங்கிய கௌரவம் வழிசமைத்தது. தொடர்ந்து இலங்கை வானொலி தமிழ்ச்சேவையில் இசையமைப்பாளர் நியமனமும் இவருக்குக் கைகூடிற்று.
மெல்லிசை நிகழ்வுகளையும் பொப்பிசை நிகழ்வுகளையும் இலங்கை வானொலிக் கலையத்தின் ஊடாகவும் கண்ணன் நேசம் இரட்டையர் என்ற பயணத்தின் ஊடாகவும் இசைப்பரிதி கண்ணன் வழங்கினார்.
வண்ணைக் கலைவாணர் நாடக மன்றத்தின் நாடகங்களுக்கு இசைவழங்கியதுடன் 1978 இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக அரங்கக் கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மண் சுமந்த மேனியர் போன்ற நாடகங்களுக்கும் இசை வழங்கினார். கோமாளிகள், ஏமாளிகள், தெய்வம் தந்த வீடு முதலிய ஈழத்துத் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கும் இசை வழங்கினார்.
நம்மண்ணிற்குரிய இசை வடிவங்களாக மெல்லிசை, பொப்பிசை என்பன ஆரம்ப காலத்தில் திகழ்ந்தன. விடுதலைப் போராட்டம் கூர்மையுற்ற பின்னர் புரட்சிப் பாடல்கள் மக்கள் மத்தியில் புகழ் பெற்றன. இவற்றிற்கு தனது தனித்துவமான இசையால் உருவமும் உள்ளடக்கமும் கொடுத்த பெருமைக்குரியவர் கண்ணன் அவர்களேயாவார். இவரது இசையில் வெளிவந்த பத்திப் பாடல்களும் தனித்துவம் மிக்கனவாகத் திகழ்கின்றன.
கண்ணனின் இசையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளன. தென்னிந்திய இசைக்குச் சற்றும் தளர்வுறாத தனி அடையாளமாக ஈழத்து இசை திகழ்வதற்குக் கண்ணன் வழங்கிய பங்களிப்புக் கனதியானது.
‘ஆழமான இசையறிவும் தேடலும் இசைக்கருவிகளைச் சரியான முறையில் இயக்கும் திறனும் புதியது புனையும் இயல்பான ஆற்றலும் கொண்ட ஒருவரால் நிச்சயமாக இசைத்துறையில் பிரகாசிக்க முடியும். ஆனால் விஞ்ஞானத் தொழினுட்பத்தை மட்டும் நம்பியிருக்கும் ஒருவரால் இசைத்துறையில் நிலைத்திருக்க முடியாது’ என்ற வசாவிளான் தவமைந்தனின் கூற்றும் இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும். இசையமைப்பாளர் கண்ணனின் வெற்றியையும் நிலைத்;திருப்பையும் இந்தக் கூற்றுடன் பொருத்திப் பார்க்க முடியும்.
கண்ணனின் இசைவாரிசுகளாகப் பலர் இந்த மண்ணில் உதயமாகியுள்ளனர். அவர்களுள் இசையமைப்பாளர்களான முரளி, சாயிதர்சன் என்போர் கண்ணனின் புதல்வர்களாவர். வளரும் பாடகியும் தென்னிந்திய தொலைக்காட்சியில் புகழ் பெற்றவருமாகிய பவதாயினி – கண்ணனின் மகள்வழிப் பெயர்த்தி ஆவார்.
சாயி பக்தரான இசையமைப்பாளர் கண்ணன் ஈழத்து இசையுலகின் தனித்தவோர் அடையாளம். இடர்சூழ்ந்த உலகினை இசைசூழ்ந்து மகிழச் செய்த பெரியோன்.
சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் செஞ்சொற்செலவர் கலாநிதி ஆறு. திருமுருகன், திருமறைக்கலாமன்ற இயக்குநர் (மறைந்த) அருட்கலாநிதி நீ. மரியசேவியர், நாடகத்துறைப் பேராசிரியர் சி. மௌனகுரு முல்லைமண்ணின் தொழில் முயற்சியாளர் சாஜிராணி, யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் என்ற வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை இசைவாணர் மு. கண்ணனுக்கு வழங்குவதில் டான் குழுமம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றது.
செந்தமிழ்ச்சொல்லருவி
சந்திரமௌலீசன் லலீசன்
(தலைவர், டான் சாதனைத்தமிழன் விருதுத் தெரிவுக் குழு)