200 இல் மலையகம், மாற்றத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும், மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் இன்று நுவரெலியாவில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வில் தமிழ் எப் எம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேஷன், சிவஞானம் ஸ்ரீதரன், வேலுகுமார், தௌபீக் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக பாடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இதன்போது நினைகூறப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.இந்த கௌரவத்தையும், அவருக்கான விருதையும், அவரின் புதல்வாரன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்நிகழ்வில் மலைய சமூக மேம்பாட்டிற்காக ஊடகத்துறையில் தமிழ் எப் எம் ஆற்றிய சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அலைவரிசைப் பிரதானி ஹோஷியா அனோஜனின் தலைமையில் சிறப்பாக வழிநடத்தப்படும் தமிழ் எப் எம் செய்திப் பிரிவு வடக்கு, கிழக்கு மாத்திரம் அன்றி மலையகம் சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்தும் வழங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இதற்கமைய, வழங்கப்பட்ட இந்த விருதினை தமிழ் எப் எம்மின் உதவி செய்தி முகாமையாளர் யோகராஜ் தர்மராஜ் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, எமது ஊடக வலைமைப்பின் மற்றுமொரு ஊடகமான ஆதவன் தொலைக்காட்சிக்கும் மலைய சமூக மேம்பாட்டிற்காக ஊடகத்துறையில் ஆற்றிய சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மலையகத்தில் பல சாதனைகளை நிலைநாட்டிய கல்விமான்கள் மற்றும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கான விருதுகள் பிரதம அதிதியாகக் கலந்துககொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட ஏனைய அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.