யாழ் மண்ணின் “ஆலங்குருவியே “பாடல்
தேசிய விருது பெற்ற இயக்குனர் அருள்செல்வத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆலங்குருவியே பாடல் யாழ்ப்பாணத்தின் திறமையான கலைஞர்களின் முயற்சியில் உருவாகியுள்ளது.
பல திரையிசை பாடல்களையும் குறுந்திரைப்படங்களையும் இயக்கி விருதுகளை தனதாக்கி, பல புதிய கலைஞர்களை உருவாக்கி தரும் முன்னணி இயக்குனர்களில் அருள்செல்வம் தனியிடம் பெறுகின்றார். அந்தவகையில் ஸ்ரீவிஜய் ராகவனின் இசை மற்றும் வரிகள் இந்த பாடலை மென்மேலும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நம் நாட்டு நடிகர்களான குணாளன் மற்றும் லஜந்த குணா நடிகை கிறிஸ்டினா கிரேஸ், சோபி ஆகியோரின் இயல்பான நடிப்பு கதையை தெளிவாக விளக்குகின்றது.
பாடலில் சிறப்பாக பேசப்படுகின்ற யாழ்ப்பாண கிராமங்களின் காட்சியமைப்பினை பாடலின் கருப்பொருளை விரிவுபடுத்தும் விதமாக காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நேர்த்தியாக தனித்துவமாக படம்பிடித்து பன்முகத் திறமையாளரென அருள்செல்வம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இலங்கையின் இயக்குனர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் மற்றும் நிகழ்ச்சிதயாரிப்பாளராக பணியாற்றும் அருள்செல்வத்தின் படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.