சாதிக்க வயது அவசியம் இல்லை திறமை இருந்தால் போதும் -ஜனேஹா

பதுளை பிறப்பிடமாக கொண்டுள்ள செல்வி இராஜேந்திரன் ஜனேஹா ஊடக துறையில் சாதிக்க வேண்டும், தன் திறமைகள் வெளிப்பட வேண்டும் என தன்னுடைய வாழ்வில் தனக்கான களத்தை தெரிந்தெடுத்துக் கொண்டார். 

சிறு வயதில் நம் இலட்சியம் என்ன? என்று கேட்டால் வைத்தியர், ஆசிரியர் என கூறுவோம். ஆனால் வளர வளரத் தான் பல்வேறு துறைகளிலும் எம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும்.

இவர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வி முதல் உயர் தர கல்வி வரை கற்றார். இவரிடம் பேச்சுத் திறமை மட்டுமன்றி பரதநாட்டியம் ஆடும் திறமையும் கலந்துள்ளது.

பாடசாலையில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் பேச்சு, நடனம் என சிறு சிறு பாடசாலை ரீதியிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் தன் திறமையை வெளிப்படுத்த பெரியளவிலான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

அவருக்கான வாய்ப்புக்களுக்காக ஏங்கிய காலமும், வாய்ப்பு கிடைக்கும் என ஏமாற்றமடைந்த காலமும் உண்டு.

படிப்பதில் சாதாரண மட்டத்தில் தான் இருந்த இவர் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முன்னிலையில் இருந்துள்ளார். தன்னுடய திறமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு களத்தையும் நோக்கி சென்றுள்ளார்.

நடனப் போட்டி, அகில இலங்கை சதுரங்க போட்டி என பங்கேற்றுள்ளார். பாடசாலை மாணவ தலைவியாக பதவி வகித்துள்ளார். பாடசாலை மேலைத்தேய வாத்தியக் குழுவில் தனது உயரம் குறித்து பேசியதால் தனது வாத்தியம் இசைக்கும் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் அதற்கான களமும் அவரை தேடி வந்தது.

தேசிய மாணவ சிப்பாய் படையணி( NCC ) யில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதுவரை Melodica, accordion மட்டும் இசைக்க தெரிந்த இவரது கரங்கள் saxophone என்ற வாத்தியத்தை இசைக்க செய்தது. தேசிய மாணவ சிப்பாய் படையணியில் இணைந்து பாடசாலை மேலைத்தேய வாத்திய குழுவிலும் இணைந்தார்.

 தன் திறமைகள் வெளிப்படச் செய்த அதே நேரத்தில் தன்னுடைய படிப்பு ரீதியான நடவடிக்கை சாதாரண மட்டத்தில் இருந்ததால் இவர் படிப்பை தவிர்த்து மற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் க. பொ. த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்கள் சித்தி அடைய போவதில்லை என ஆசிரியர்கள் கூறிய போதும் 9 பாடங்களும் சித்தி அடைந்து உயர் தரத்தில் கலை பிரிவில் படித்தார். உயர் தரம் படிக்கும் போது ஏனோ அறிவிப்பாளர் துறை மீது ஒர் ஆர்வம் இவருக்கு வந்தது.

பாடசாலையில் நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்த போதும் இவருக்கு கவர்ச்சிகரமான குரல் இல்லை எனக் கூறி இவரை சில ஆசிரியர்கள் நிராகரித்தனர். பின் பல்கலைகழகம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துள்ளார். ஆனால் வாழ்க்கை ஒரு போதும் ஒரே கோணத்தில் செல்லாது என்பதை உணர்த்தும் விதத்தில் பெரும் இன்னல்களை சந்தித்து உயர் தர பரீட்சை எழுதினார்.

பரீட்சை நிறைவடைந்த பின் அறிவிப்பாளர் கனவுக்கான களத்தை நோக்கி சென்றுள்ளார். MBC MEDIA NETWORK என்ற அறிவிப்பாளருக்கான பயிற்சி நிலையம் இவருக்கு கை தந்தது. புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள் என இத் துறையில் பயணித்து பயிற்சி முடிவில் RADIO MBC யில் அறிவிப்பாளராக, செய்தி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. பின் உயர் தர பரீட்சை பெறுபேறு வந்தது. பரீட்சையில் சித்தி அடைந்த போதும் பல்கலைகழகம் செல்வதற்கான Z-score புள்ளி போதியதாக இருக்கவில்லை.

தனது பெற்றோரின் உந்துதலால் மீண்டும் உயர்தர பரீட்சைக்காக படிக்க தயாராகினார். முதல் தடவை செய்த பாடங்களில் வரலாறு பாடம் தவிர்த்து மற்றைய இரண்டு பாடங்களுக்கு பதிலாக நடனம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்ததால் நடனம் மற்றும் ஊடக துறை பற்றி ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆர்வம் இருந்ததால் தொடர்பாடலும் ஊடக கற்கையும் ஆகிய பாடங்களை தெரிவு செய்துள்ளார். ஊடக துறைக்கான ஆசிரியர் பதுளையில் இல்லாததால் யாழ்ப்பாணம் சென்று படிப்பை தொடர்ந்தார். இருப்பினும் தன் இடைவெளி நேரங்களில் தன் குரல்வளத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்து கொண்டிருந்துள்ளார்.
           
தற்போது பரீட்சை பெறுபேறுக்காக காத்துக் கொண்டே ஊடக துறையில் பணி செய்து கொண்டும் வரலாறு பாடம் குறித்து மாணவர்களுக்கு வகுப்புக்கள் செய்து கொண்டும் இருக்கின்றார். அத்தோடு இவரது சகோதரர் கலாவித்தகர் இராஜேந்திரன் ஹர்ஷானின் மாணவியாக நடன துறையில் ” கலாவித்தகர் ”  பட்ட படிப்பினை தொடர்ந்துள்ளார்.

இவரது வயது 22 ஆக இருந்தாலும் சாதிக்க வயதில்லை என்பதை உணர்த்திக் கூடியதாக உள்ளது. இந்த வயதில் இப்படியான ஓர் நிலையில் நிறுத்தியது தன் பெற்றோர்கள் என்றும் தனது அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக தன் பெற்றோரே நின்றார்கள் எப்போதும் நிற்பார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களை பெருமை அடையச் செய்ய வேண்டும் என்பது என்றும் தன் கடமையாக கொண்டுள்ளார்.

சாதிக்க வயது அவசியம் இல்லை திறமை இருந்தால் போதும்.

அன்று கவர்ச்சி இல்லாத குரல் என கூறி நிராகரித்த இந்தக் குரல் தான் இன்று இவரை அடையாளப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!