மறைந்த மூத்த கலைஞ்சர் அமரர் கலாபூஷணம் சந்திரசேகரன் அவர்களுக்கு பலரும் தங்கள் அனுதாபங்களையும் , அவரோடு பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர் .
பல தசாப்தங்களாக இலங்கையில் கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென
அனைத்திலும் சாதனை மேல் சாதனை படைத்து சகல சமூகத்தினர் மத்தியிலும்
பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்த அன்பு
நண்பர் கலாபூஷணம் K.சந்திரசேகரன்
அவர்கள் இன்று (2023.04.29) நமையெலாம்
பிரிந்தது மாறாத் துயரளிக்கிறது!
எவ்வளவோ அனுபவமிக்க பல்துறைக்
கலைஞர் என்றாலும் புதியவர்களையும்
கலையுலகில் சோபிக்க மனம் திறந்து
வழிகாட்டிய அவரது மறைவு அவரோடு
கொஞ்சமாவது பழகிய ஒவ்வொருவர்
மனதிலும் பெரும் தாக்கத்தை நிச்சயமாக
ஏற்படுத்தவே செய்யும்!
அவரோடு பழகிய இனிய தருணங்களை
மறக்கவே முடியாது! நான் வானொலியோடு
மும்முரமாகத் தொடர்புபட்டிருந்த காலகட்டத்தில் அவரது விளம்பர நிறுவனம் அனுசரணை வழங்கிய “கேர்ண் தரும்
கலையரங்கம்” உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் வாராவாரம் குறுநாடகங்கள் எழுதி அவரோடு நடித்த
நாட்களை இப்போதும் நினைத்தாலே இனிக்கிறது! இலங்கை வானொலிக்கு
மாத்திரமன்றி அப்போது புதிதாய்த்
தோன்றிய FM99 தனியார் வானொலியிலும்
அவரது விளம்பர நிகழ்ச்சிக்குப் பிரதியெழுதிய காலமும் மறக்க முடியாதது!
அமரர் மரிக்கார் ராம்தாஸ் எழுதிவந்த
“கோமாளிகள்” வானொலி நாடகத் தொடரைப் பின்னாளில் நான் எழுத
வாய்ப்புக் கிடைத்தபோது நண்பர்
K.சந்திரசேகரனுக்காகப் ” பண்டிதர்” என்ற
பாத்திரத்தை உருவாக்கியபோது அவரது
அபார நடிப்பால் நேயர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பைப் பெற்றது! காலப்போக்கில் நாட்டின் அசாதாரணமான
சூழ்நிலைகளால் பல கலைஞர்கள்
புலம்பெயர்ந்தும், சிலர் மறைந்தும் போனதால் கலை நிகழ்வுகள் குறைந்து
போனாலும் சந்தர்ப்பம் வாய்க்கும்
போதெல்லாம் சந்திரசேகரனின் திறமை
வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது!
கலாசாரத் திணைக்களத்தில் பல்வேறு ஆலோசனைச் சபைகளில் அங்கம் வகித்த
அவர் சில சந்தர்ப்பங்களில் என்னையும்
துணையாக அழைத்துச் சென்ற சந்தர்ப்பங்கள்! அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் வலுக்கட்டாயமாக
எனக்கு முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்து வைத்து எனது வானொலி
அனுபவங்களை எழுத வழிகாட்டினார்!
ஆரம்ப நாட்களில் என் பல பதிவுகளை
அவரேதான் முகநூலில் பதிவேற்றம் செய்தார்!
சமீபகாலமாக காலமாக அவர் இந்தியாவிலேயே அவரது சொந்தங்களோடு வாழ்ந்து வந்ததால்
நேரில் சந்திக்க முடியாத போதும்
தினம் தினம் முகநூல் வழியாக
உறவாட முடிந்தது! இனி தினம் தினம்
முகநூலில் சஞ்சரிக்கும்போது அவர்
நெஞ்சில் நிழலாடுவார்!
அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகளைக் கண்ணீருடன்
காணிக்கையாக்குகிறேன்!