இலங்கையில் முதன் முறையாக தமிழ், சிங்களம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, போஜ்பூரி, கொரியன், ஹிந்தி மற்றும் சீன மொழி ஆகிய 11 மொழிகளில் தென்னிந்திய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கும் பான் திரைப்படமாக “அகோரன் 2“ உருவாகியுள்ளது.
இதன் சிறப்பு பார்வையை வலிமை, நேர்கொண்ட பார்வை, நெஞ்சுக்கு நீதி மற்றும் AK61ன் தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூரினால் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
Jaffna Event Planner நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தினை அஜிதன். ஜே இயக்கியள்ளார். அஜீபன் ராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்ய திஷோன் விஜயமோகன் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அகோரன் 2 திரைப்படத்தில் ஜெனிபர் ஸாரா ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியுள்ளதுடன் ஆடை வடிவமைப்பாளராக ஹமிஷ் கேஷாகன் பணியாற்றியுள்ளார். சண்டைப் பயிற்சியாளர்களாக சுஜநீதன் ஸ்ரீகுமார், மற்றும் விதுனுவான் பெர்னாண்டோ ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள். மேலும் துணை இயக்குனர்களாக அவந்திகா ரணசிங்ஹே, வஜி வரன் மற்றும் ரி.சங்கீதன் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் ஐஷ்வர்யா யோகராஜா, சங்கீதன், சுஜநீதன் ஸ்ரீகுமார், வஜிவரன், ஹமிஷ் கேஷாகன், அனுஷன், தர்ஷன், சிவா, எஸ்.பி. நிதப்பன், ஜெனிபர் ஸாரா ஆகியோர் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
கடந்த வருடம் மார்ச் 5ம் திகதி நடிகை ஸபித்தா ரெட்டி மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரால் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக எஸ்.எஸ். பிரதர்ஸ் விளங்குகிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் எஸ். சிவனுஜன், அஜிதன். ஜே, வி. ராஜனர்தனன், ஆர்.கே. ரொஹான் போன்ற முக்கிய கலைஞர்களும் பணியாற்றியுள்ளார்கள்.
கடந்த வருடம் ஏப்ரல் 14 ஆம் திகதி பாடகர் வி.வி. பிரசன்னா மற்றும் மலையாளத் திரையுலக இயக்குனர் அனில் ஆகியோர் அகோரன் 2 திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அகோரன் 2 திரைப்படத்தின் இரண்டாம் பார்வையை பாபநாசம் திரைப்படப் புகழ் ஜீது ஜோஸப் மற்றும் கே.ஜி.எப் திரைப்படத்தின் கலை இயக்குனர் சிவகுமார். ஜே மற்றும் வலிமை, அண்ணாத்த போன்ற திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.
மேலும் இயக்குனர் பொன் மாணிக்கவேல், கே.ஜி.எப். திரைப்படத்தின் கலை இயக்குனர் சிவகுமார் ஜே மற்றும் கே.ஜி.எப். திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஆகியோர் படத்தின் மூன்றாவது பார்வையை வெளியிட்டு வைத்தார்கள். 2022 ஆம் ஆண்டின் வைகாசி மாதத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகள் மற்றும் முன்னணி OTT தளங்கள் ஊடாக அகோரன் 2 வெளியாகவுள்ளது.