மாயைக்குள் சிக்கியிருந்த வேளை அருகிருந்த நீ, தெளிவடைந்து ஒன்றாய் எழுந்த போது எங்கு சென்றாய் மங்கள? இறுதி நிகழ்வில் ஆகாயத்தை நோக்கும் சந்திரிக்கா!மங்களவின் இளநிலை தாராளவாதத்தை, இனவாதம் ஆட்கொண்டது – முதுநிலை தராளவாதத்தை கொரோனா பலிகொண்டது!
முன்னாள் அமைச்சர் காலம் சென்ற மங்கள சமரவீர 1994 முதல், 2004வரை சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவுடன் நெருக்கமாக இருந்தார். இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சரவையின் பிரதான அமைச்சராகவும், யுத்தத்தை வழிநடத்திய சந்திரிக்காவின் வலதுகரமாகவும் இருந்தார்.
புலிகளுடனான சமாதானப் பேச்சவார்த்தையின் போது ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பிரதான 3 அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்தெடுத்தமை உட்பட பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில் பங்காளராக விளங்கினார். எனினும் சந்திரிக்கா அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் அவருடன் முரண்பட்டார்.2005 நவம்பரில் மகிந்த ராஜபக்ஸவை ஆட்சிப்பீடம் ஏற்றுவதில் முன்னின்றார். அவரது வலதுகரமானார். 2007 பெப்ரவரியில் அவருடன் முரண்பட்டார். அவரை கடுமையாக விமர்சித்தார்.
புதிய கட்சியை அரம்பித்தார். நாடாளுமன்றில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார். 2010 பொதுத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமானாவராகவும், முக்கிய ஆலோசகராகவும் மாறினார். 2015ல் தனது அரசியல் எதிரியான மகிந்தவை தோற்கடிக்க, ஏற்கனவே முரண்பட்ட தனது முன்னாள் நண்பி சந்திரிக்கா, புதிய நண்பர் ரணில், மேலைத்தேயம், இந்தியாவுடன் இணைந்து முன்னைய சகா மைத்திரிபால சேனநாயக்காவை பொது வேட்பாளராக நியமிப்பதில் முக்கிய பங்கு வகித்ததோடு, அந்த ஜனாதிபதி தேர்தலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கினார்.
ரணிலின் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சர், நிதியமைச்சர் பதவிகளை வகித்த மங்கள, ரணில் தலமையிலான ஐக்கியதேசியக் கட்சியுடன் இணைந்து மைத்திரியுடன் முரண்பட்டார்.2019ல் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியுடன், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபின், பொதுத்தேர்தல் குறித்த விடயங்களில் ரணிலுடன் முரண்பட்டு சஜித்துடன் இணைந்து, ஐக்கியமக்கள் சக்த்தியின் ஊடாக மாத்தறை மாவட்த்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் சஜித் பிரேமதாஸாவும் இனவாத அரசியலை மேற்கொள்ளும் பிரதான கட்சிகளுக்கு சளைத்தவர் அல்ல, ஆட்சிப் பீடம் ஏறுவதற்காக இனவாதம் பேசுகிறார் எனக் கூறி தேர்தலில் இருந்து விலகுவதாகவும், நாடாளுமன்ற அரசியலில் தான் ஈடுபடப் போவதில்லை எனவும் அறிவித்தார்.
1983ல் இருந்து 2007 வரை 24 வருடங்கள் இலங்கையின் பிரதான பெரும் தேசிய பேரினவாதக் கட்சிகளுடன், அவர்களின் கொள்கைகளுடன் அரசியல் செய்த மங்கள, 2007ல் தன் ஆழ்மனதில் ஒழிந்திருந்த லிபரல் என்கிற தாராளவாத கொள்கைகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தார். இன மத மொழி பேதங்களைக் கடந்த தேசிய அரசியல் பற்றி சிந்தித்தார்.
அதனை நோக்கி செயற்படத் தொடங்கினார். 2015ல் நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போது ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் திர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தையும் இணை அனுசரைணையாளராக இணைக்க வழிவகுத்தார்.
இந்த இணை அனுசரணை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் அதுவே முதலும் இறுதியுமான அனுசரணை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இலங்கையின் எந்த அரசாங்கமும் இதனை ஒருபோதும் இனிச் செய்ய துணியப் போவதில்லை.2020ன் பின் 3 ஆவது அரசியல் பார்வை குறித்து சிந்தித்தார்.
இலங்கையில் ஊறிப் போயிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்பாட்டு அரசியலுக்கு மாற்றான ஒரு அரசியல் பற்றி சிந்தித்தார். அதனை நோக்கி உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார்.
சந்திரிக்கா போன்ற முன்னாள் அரசியல் பிரமுகர்களும் அவருடன் இது குறித்து சிந்தித்தார்கள்.ஆனால் இலங்கையின் துர் அதிஸ்ட்டமோ அல்லது ஏனைய தேசிய இனங்களின் துர்பாக்கியமோ இல்லை ராஜபக்ஸக்களின் அதிஸ்டமோ எல்லோருடனும் முரண்பட்டு மீள் எழுந்த மங்கள கொரோனாவுடன் முரண்பட்டு எழமுடியாது பலியாகிப் போனார்…
ஆக்கம் : Nadarajah Kuruparan