மெனிக்கே மஹே ஹிதே.. இரவில் ஒன்றே ஒன்று என்ற பாடலின் மூலம் இலங்கையைச் சேர்ந்த இளம் பாடகி யொஹானி இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றார்.
உலகளாவிய ரீதியில் இவரது இந்தப் பாடல் 50மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
முதலில் சகோதர மொழியில் வெளியான இந்த பாடல் பின்னர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
யொஹானியின் தந்தை யார் தெரியுமா? இலங்கையின் 30 வருட கால யுத்தத்தில் முக்கியமான கட்டத்தில் இராணுவத்தை வழி நடத்திய 57 வது படையணியின் பிரதானி பிரசன்ன டி சில்வா.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது அடிக்கடி முனு முனுக்கும் பாடலாக இது மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள இந்தப் பாடலை மில்லியன் கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ள நிலையில் அவர்களுள் ஒருவராக வந்திருக்கின்றார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார், இந்திய சினிமாவின் கிங் மற்றும் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்ற அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன் இந்த பாடலை பற்றிக் குறிப்பிடும்போது இந்த பாட்டின் இசையில் நான் மயங்கிப்போனேன் என்ற விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் மற்றும் முகப்புத்தக தளத்தில் பதிவுகளையும் இட்டுள்ளார்.
அது மாத்திரம் இல்லாது இன்று இந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் பாடப்பட்டு வருகின்றது.
உலகளவில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்த பாடலைப் பாடிய யொஹானி இன்று உலகளவில் பேசப்படும் இலங்கையின் இசை பொக்கிஷம்.