நாமலின் யோசனைக்கு பூரண ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
22/06/2021 இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுவோர் உட்பட அனைவருக்கும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அவர்கள் பிணையில் அல்லது வழக்கு முடிவுறுத்தப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீதி அமைச்சிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.அத்துடன் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் இந்த கோரிக்கையினை வரவேற்பதுடன் இதற்கு பூரண ஆதரவும் அளிக்கின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினால் இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மிக நீண்ட காலமாக வழக்கு விசாரணை நடத்தப்படாமலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் இளமைக்காலம் முழுவதும் சிறைச்சாலையிலேயே கழிந்து வருகின்றது. சிலவேளைகளில் அவர்கள் தவறான வழிநடத்தல்களால் சில தவறுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட உரிய தண்டனை காலத்தினை தாண்டியும் மிக நீண்ட காலமாக அவர்கள் எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது அவர்களின் உடல் உள ரீதியான பிரச்சனைகளை மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு விடயமாகும். ஏனென்றால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக எந்தவித விசாரணைகளும் இன்றி அரசியல் பழிவாங்கலுக்காக மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் நேரடியாகவும் அனுபவரீதியாகவும் அதன் வேதனையினையும் வலியினையும் நன்கு உணர்ந்தவன்.
அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் உட்பட அனைவரையும் அரசாங்கம் விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்பதுடன் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீதி அமைச்சு மிக துரிதமாக செயல்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைத்திருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்த செயற்பாட்டிற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது பூரண ஆதரவினையும் ஒத்துழைப்பையும் எப்போதும் வழங்கும் என்பதனையும் இவ்விடத்தில் ஆணித்தனமாக கூறிக்கொள்ளுகின்றேன்.
226Kiskanthamuthaly Muthaly and 225 others31 comments26 sharesLikeCommentShare