போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் – அதற்கு பொதுமக்களின் நடவடிக்கைகளே காரணம் – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அதற்கு பொதுமக்களே காரணம் என பொது சுகாதார பரிசோதகர்சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாவிட்டால் அதற்கு பொதுமக்களே காரணம் என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
வருமானம் உழைப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தும் அரசபொதுதுறை ஊழியர்களும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பையேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவைக்குள் அடங்காத தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அழைக்கின்றன என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.ஆகக்குறைந்தளவு ஊழியர்களையே வேலைக்கு அழைக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை நிறுவனங்கள் புறக்கணித்துள்ள என குறிப்பிட்டுள்ள உபுல்ரோகண இது தொடர்ந்தால் கொரோனா வைரஸ்நோயாளிகளிதும் உயிரிழப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகள் மீறப்பட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் கொரோனாநிலைமை கட்டுப்பாட்டிற்குள் வருவதை உறுதி செய்வதற்காக மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் தொடர்ந்தும் வழிகாட்டுதல்களை மீறினால் நாடு மிகவும் ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.