நமது கலைஞ்சர்களையும் ,ஊடக படைப்பாளர்களையும் நேர்காணும் இலங்கையின் ஒரே ஒரு இணையத்தளமான இன் ஊடகவியலாளர் ராகுல் அவர்களால் அறிவிப்பாளரும் ,ஊடகவியலாளருமான மனோ வாணியை நேர்கண்ட போது அவர் தந்த பதில்கள்
1.நீங்கள் ஊடகத்துறையில் வருவதற்கான காரணம் என்ன?
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நான் இப்படித்தான் ஆகப்போகிறேன் என்ற கனவு இருக்கும் அதை உறுதியாக மனதில் நினைத்துவிட்டாலே போதும் காலம் அழகா கொண்டுசென்று அந்த இடத்தில் எம்மை விட்டுவிடும் என்பது எனது நம்பிக்கை. சிறு வயதில் விளையாட்டாக அறிவிப்பாளர்களை பார்த்து அவர்களை போலவே பேசிப்பார்ப்பேன். அவர்கள் பேசும்போது நானே பேசுவதாக எண்ணிக்கொண்டு முகபாவனைக்கூட செய்து பார்த்ததுண்டு. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும். என்னை அறியாமலேயே எனக்குள், என் ஆன்மாவிற்க்குள் விதைக்கப்பட்ட விதைதான் இன்று முளைத்து முட்டிமோதி வளர்ந்துகொண்டிருக்கிறேன்.
2.பொதுவாக ஊடக துறையில் பல்வேறு துறைகள் இருக்கும் போது நீங்கள் ஏன் அறிவிப்பு துறையே தேர்வு செய்தீர்கள்?
சொல்லும் செயலும்தான் ஒரு மனிதை அடையாளப்படுத்தும் என்று கூறுவதுண்டு. ஒருவருக்கு செயலால் வழங்கப்படும் உதவியையோ, அன்பையோ அல்லது நம்பிக்கையையோ விட சொல்லால் ஒருவரை இலகுவாக கவர முடியும். என்னை அறிமுகமே இல்லாத பலர் என்னை தேடி வந்து அன்பாக, உங்கள் பேச்சு எனக்கு ஆறுதல் தருகின்றது, உங்கள் குரல் மிகவும் பிடித்திருக்கின்றது என்று சொல்லும்போது அந்த நொடி எனக்கே என்மீது அன்பு கூடுகின்றது. நேயர்களோடு உரையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம். அறிவிப்பு என்பது ஒரு அழகான, மக்களின் நம்பிக்கையும், அன்பையும் பெறக்கூடிய கலை. அதை நான் பெரிதும் நேசிக்கின்றேன். இதுவே எனக்கு அறிவிப்பு துறை மீதான ஈர்ப்புக்கு காரணம்.
3.குறிப்பாக ஊடகத்துறையில் பல போட்டிகள் காணப்படும் அந்த வகையில் உங்களுக்கு போட்டியாக யார் இருக்கிறார்கள்?
எனக்கு போட்டியாக நான் யாரையும் எடை போடுவதில்லை. ஒவ்வொருவரது திறமையின் சாயலும் வித்தியாசப்படும். எனக்கென்று ஒரு தனி சாயல் உள்ளது. அது யாரிடமும் போய் ஒட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை. நான்தான் உனக்கு போட்டி என்று ஒருவர் வந்தாலும் அவரிடம் உள்ள நல்ல விடையங்களை கற்றுக்கொண்டு நான் சற்றும் தடுமாறாமல் பயணிப்பேனே தவிர யாரையும் போட்டியாக எண்ணி நிலைகுலையமாட்டேன்.
4.நீங்கள் ஊடக துறையில் வேலை செய்யும் போது எவ்வாறான சவால்களை எதிர்கொன்றீர்கள்?
பொதுவாக ஊடகத்துறையில் பணியாற்றுவதே ஒரு போராட்டம்தான். அதிலும் ஒரு பெண் என்ற ரீதியில் அகிகமான சவால்கள் வந்தன. இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அத்தனையும் என்னை வலுப்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஊடகப்பாதை எப்படிப்பட்டது என்பதை அறிவது, அதற்க்கு எம்மை தயார்படுத்துவது, ஒவ்வொரு விடயத்தையும் தேடித்தேடி கற்றுக்கொள்வது , அதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களும் அதனை சமாளிக்கும் திறனும், ஊடக சூழலை சமாளிப்பது ஒருபக்கம் இருக்க, தனிப்பட்ட குடும்பம், கனவுகள் இப்படி பலவற்றின் சவால்களை நேர்கொள்ளக்கூடும்.ஆனால் வலிகளும் அவமானங்களும்தான் என்னை உறுதியானவளாய் மாற்றுகின்றது. எனவே எனது சவால்களை நான் மதிக்கின்றேன், அவை நன்மைக்கே என்பதை நம்புகின்றேன்.
5.பொதுவாக வானொலியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என்று கூற முடியுமா?
வானொலியில் எனக்கு எல்லாவகையான நிகழ்ச்சிகள் மீதும் பற்று இருக்கின்றது. எப்படிப்பட்ட நிகழ்ச்சியை கொடுத்தாலும் நம்பிக்கையோடு செய்ய முயல்வேன். இருப்பினும் நான் கேப்பிடல் வானொலியில் தொகுத்து வழங்கிய கேப்பிடல் டிரைவ், காற்றின் மொழி, கேப்பிடல் ரிதம் மற்றும் தற்போழுது ஆதவன் வானொலியில் தொகுத்து வழங்கும் ஹலோ ஆதவன் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சிகள்.
6.பொதுவாக ஊடக துறையில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு ஊடக துறையில்
விலகி விடுவார்கள் .அது போன்று நிகழும் திருமணம் செய்த பின் இந்த ஊடக துறையில் தொடர்ந்து பணியாற்றுவீர்களா?
திருமணம் ஆனாலும் ஒரு ஆண் எப்படி ஊடகத்துறையில் பணியாற்றுவார் என நம்பிக்கை கொள்வோமோ அதைவிட நானும் கண்டிப்பாக பணியாற்றுவேன் என நம்புகிறேன். நான் என் கனவுகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுப்பவள். எனவே என் கனவுகளை மீறிய அதை தடுக்கக்கூடிய செயல்கள் மீதும், உறவுகள் மீதும் நான் நம்பிக்கை கொள்வதில்லை.
7.நீங்கள் யாரை போன்று ஊடகத்துறையில் எதிர்காலத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
திறமையான பல ஊடகவியலார்களை பார்த்து இவர்களைப்போன்று பாராட்டும் பெருமிதமும் கொள்ளவேண்டும் என்று எண்ணியபோதும் அவர்களை போலவே வரவேண்டும் என்பது எண்ணமில்லை எனக்கென்ற தனித்தன்மையில் இவரைப்போல இவர் மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு தனித்தன்மை கொண்டவளாக வரவேண்டும் என்பதே எண்ணம்.
8.நீங்கள் ஊடகத்துறைக்குள் வரும் போது யாரெல்லாம் உங்களுக்கு பங்களிப்பு வழங்கினார்கள்?
நான் ஊடகத்துறைக்கு வருவதற்கு முதலில் எனது நம்பிக்கையும் முயற்சியும் காரணமாக இருந்ததோடு அதற்கு எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது. அதையும் விட அந்த காலங்களில் எப்படியாவது இந்த துறைக்குள் செல்லவேண்டும் என்று தூண்டுதல் வரக்காரணமாக எனது தாய் வானொலியான கேப்பிட்டல் வானொலி இருந்தது என்பதையும் மறவேன். அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
9.இறுதியாக ஒரு கேள்வி கேட்க நினைக்கிறேன். நீங்கள் ஊடக அறிவிப்பாளராக வரவில்லை என்றால் நீங்கள் எந்த துறையில் வேலை செய்து இருப்பீர்கள்?
அறிவிப்பாளர் என்ற துறையை தவிர்ந்து எனக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருக்கின்றது. அது சம்பந்தமாக எனது மேலதிக கல்வியையும் பயணத்தையும் தொடர்ந்து இருக்கலாம் அல்லது வேறு பாதையை கூட தேர்ந்தெடுத்திருக்கலாம். நன்றி.
இவ்வாறு ஊடகவியலாளருமான மனோ வாணி எமது ஊடகவியலாளர் ராகுல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்