இயக்குனர் கேசவராஜன் மறைந்த மாமனிதர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் மறைவு தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் இட்ட பதிவு
அதற்குள் என்ன அவசரம் அண்ணர் உங்களுக்கு? ஓய்ந்தறியாத உங்கள் கைகளும் கால்களும் சிந்தனையும்….!
என் அடுத்த படைப்பிற்கு உங்களை மனதிற் கொண்டல்லவா திரைக்கதை எழுதுகிறேன். சம்மதம் சொல்லிவிட்டு, சொல்லாமற்ச் சென்றுவிட்டீர்களே அண்ணர்.
எத்தனை சண்டைகள் மூண்டன நம்மிடையே. எத்தனை தரம் முன்னையதை விட ஆழ்ந்த நட்புடன் மீண்டும் ஒன்றானோம்.
இறுதியாக ஒருமுறை திரையில் இணைய இருந்த வேளையில் நீங்கள் ஓடி மறைந்தது மன்னிக்க முடியாத குற்றம் அண்ணர்.
எந்த இலட்சியத்துக்காக நாம் இணைந்து பணியாற்றினோமோ அதுவும் கானலாகப் போக நீங்களும் போய்விட்டீர்கள்.
நானும் நீங்களும் ஏரம்புவும் சேரலாதனும் சேர்ந்து செய்த வேடிக்கைகள் இப்போது மனதில் மீண்டெழுகின்றன.
நாமும் போக வேண்டிய இடத்துக்குத் தான் நீங்கள் சற்று முந்திப் போய்விட்டீர்கள்.
விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்.
#மாமனிதர்_முல்லை_யேசுதாசன்.
#இறுதி_நிகழ்வு_நாளை_08_02_2020_பி_ப_2மணி.
தாயகத்தில் இயங்கும் எங்கள் உண்மையான கலைஞர்கள், படைப்பாளிகள் எவருக்கும் இறப்பின் பின் அமைப்பின் பெயரால் இயங்கும் நிறுவனங்களாலும் கௌரவங்கள் கிடைத்ததில்லை. விடுதலைப் பாடல்களை இசையமைத்த யாழ் ரமணனை “யார் இவர், கேள்விப்பட்டதில்லையே” என்று கேட்ட உத்தம புத்திரர்கள் தான் நம் விடுதலையின் எதிர்கால வழிகாட்டிகளாம்.
இவர்கள் திடீரென யாருக்காவது நாட்டுப்பற்றாளர் அல்லது மாமனிதர் விருதுகளை அறிவிப்பார்கள். அல்லது ஏதாவதுபுதிய விருதுகளை அறிவிப்பார்கள்.அவர்களைத் தாயகத்தில் இருக்கும் மக்கள் அறியார்.
ஆனால் இந்த மனிதருக்கு மாமனிதர் விருது தாயகத்தில் வாழும் படைப்பாளிகள் நாம் கொடுக்கிறோம்.
சாமி அண்ணர், நீங்கள் “மாமனிதர்” தான்.
இவரின் இறுதி நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை 8-2-2020 அன்று பி.ப 2.00 மணிக்கு கள்ளப்பாடு முல்லைத்தீவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.