அரச வானொலி விருது வழங்கும் விழாவில் கெபிடல் வானொலிக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது.
இவ் விருதுகளில் ஹம்ஷி மற்றும் தரணீதரன் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
தனது விருது தொடர்பாக தரணீதரன் தனது முகப்புத்தக பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்
வானொலித்துறைக்கு வருவதற்கு முன்னதாகவே இரண்டு தேசிய விருதுகளை வாங்கி வீட்டில் வைத்துவிட்டே இந்த துறையை தேர்ந்தெடுத்தேன்.
2007 ,2008 ம் ஆண்டுகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் போட்டிகளில் தேசிய ரீதியில் அறிவிப்பாளர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டேன்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் சேவையில், தொழில்நுட்ப உத்தியோகத்தராக ஏராளமான யுத்த பாதிப்புக்குள்ளான மக்களோடு சேர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதனையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு இந்த துறைக்குள் நான் கால்பதித்தபோது அன்று எல்லோரும் என்னை முட்டாளாகவே பார்த்தார்கள்.
வானொலித்துறையின் மீதான ஆர்வமும்,வெறியும் என்னையும் இந்த வானொலித்துறைக்குள் ஈர்த்துக்கொண்டது.
பட்ட துன்பங்களும் ,வெட்டுக் குத்துக்களும், வேதனைகளையும் எனக்குள் மட்டுமே அடக்கி கொள்கிறேன், என் மனைவியை தவிர அவை பெருமளவில் யாருக்கும் தெரிவதில்லை, நான் தெரியப்படுத்துவதுமில்லை.
இன்று ஒரு தேசிய விருதுக்கு சொந்தக்காரனாகியிருக்கிறேன்.
இதுவொன்றும் பெரிய சாதனை கிடையாது.
ஆனாலும் சந்தோசம் கொள்கின்றேன்.
இந்த துறையில் இரண்டுமுறை தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்த விருதுகள் என்கரங்களை வந்து சேர்ந்திடவில்லை.ஏனென்றால் நான் தோற்றுப்போனது என் குருவானவர்களிடம் (என் பணிப்பாளர்களிடம்) .
*வானொலித்துறை சார்ந்தவர்களுக்கு தேசிய விருதுகள் 2017 முதலே வழங்கப்பட்டு வருகின்றது என்பது வேறு கதை.
1.அரச வானொலி விருது விழா-2017
அந்த பிரிவில் என் தாய் வீட்டின் ஆரம்பகால பணிப்பாளர் Navaneethan Selvarajah அண்ணா விருதை தட்டி சென்றார்.
ஆரம்ப காலத்தில் எனக்கு அதிகளவான வாய்ப்புக்களை அள்ளிக் கொடுத்து என்ன வழிப்படுத்திய ஒருவரிடம் தோற்றுப் போவதும் பெருமையே 🙂
2.தேசிய விளையாட்டு விருது விழா-2017
“சிறந்த இலத்திரனியல் விளையாட்டு ஊடகவியலாளர்” விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த ஏகலைவன் ,என் துரோணாச்சாரியார் Vaamalosanan Loshan Ragupathy Balasridharanகரங்களை அந்த விருது சென்றடைய அகமகிழ்ந்தேன்.
விளையாட்டின் மீது+ஒலிபரப்பின் மீது இவ்வளவு அலாதி பிரியம் வந்துசேர அவரைவிட வேறு யாருமே காரணமில்லையென்பேன்.
3.அரச வானொலி விருது விழா-2019
சிறந்த வானொலி நேர்முக வர்ணனையாளராக பரிந்துரைக்கப்பட்டு என் விளையாட்டு ஒலிபரப்புக்காக விருது வாங்கியிருக்கிறேன்.
இதையெல்லாம் நான் என் இங்கே நீட்டி ,நெடுத்து பதிவிடுகின்றேன் என்றால் அதுவொன்றும் தம்பட்டம் அடிப்பது கிடையாது, அப்படி யாரும் நினைத்தாலும் என்னையும் என் பயணத்தையும் அதுவொன்றும் செய்திடப் போவதில்லை.
“நான் வெற்றிகளை மட்டும் ரசித்தவன் கிடையாது,
ஏராளமான தோல்விகளால் செதுக்கப்பட்டவன்”
இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் பயணிப்பேன் என்பது எனக்கு தெரியாதது, அதுவெல்லாம் ஆண்டவன் ஆசீர்வாதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் காணாமலும் போகலாம், ஆனாலும் ஏதோவொன்றுக்காக நான் போராடிக் கொண்டேயிருப்பேன்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
தரணி உட்பட கெபிடல் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.