தர்ஷனின் குடும்பம் இன்று கேள்வி குறியாக மாறியுள்ளது .குறிப்பாக தர்ஷனின் மகளின் எதிர்காலம் .
இது தொடர்பாக எமது லோஷனின் பதிவு
தர்ஷன் தர்மராஜுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன்.
மண்டபம் நிறைந்த மக்கள்.
தெரிந்த முகங்கள், தர்ஷனின் நண்பர்கள், உறவுகள்.. அவர்களை விட அதிகமாக
சிங்களக் கலைஞர்கள்.
நான் அங்கே போவதற்கு முன்னர் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் வந்து போயிருக்கிறார்கள். நான் அங்கே நின்ற நேரத்தில் பிரபல சிங்கள கலைஞர்கள் ரஞ்சன் ராமநாயக்க, சனத் குணதிலக, சங்கீதா வீரரத்ன ஆகியோரும், அமைச்சர் பந்துல குணவர்தனவும் வந்திருந்தார்கள்.
தங்களால் சரியாகப் பயன்படுத்தப்பட்ட கலைஞனை முறையாக மரியாதை செய்வித்து அனுப்பிவைக்கவேண்டும் என்பதில் மிகவும் ஒற்றுமையாக முன்னின்று சிங்களக் கலைஞர்கள் செயற்படுவதை அவதானித்தேன்.
இன்றைய மலர்ச்சாலை செலவுகளையும் தர்ஷனின் சொந்த ஊருக்கான இறுதி யாத்திரைக்கான செலவுகளையும் கூட முன்வந்து ஏற்றிருக்கும் அவர்கள் தர்ஷனின் மகளுக்கான கல்விச் செலவுக்கும் உதவு தொகையைச் சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜனாதிபதியும் உதவுவதாகச் சொல்லியுள்ளாராம்.
சிங்களக் கலைஞர் அளவுக்கு இல்லாவிடினும் எம்மவர் நாம் முடிந்தவரை ஒரு தொகையைச் சேர்த்து அந்த மகளின் எதிர்காலத்துக்கு வழங்க முயல்வோமா?
அண்மைக் காலத்தில் எம் தமிழ்க் கலைஞர் பலரின் இறுதிக்காலம் கவனிப்பாரற்று நொடிந்து போனதையும் இறுதிச் சடங்குகளும் கூட மிகவும் சிரமமான முறையில் அவசரமாக நடத்தப்பட்டதைக் கண்டிருக்கிறோம்.
தமிழில் கலை, ஒலி, ஒளிபரப்பு, ஊடகத்துறைகளில் பணி புரிந்தோரும் புரிவோரில் (தனியார் துறையில் அதுவும் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுவோர் தவிர) அநேகர் எதிர்காலம் பற்றிய ஒரு வித பயத்துடனும் நம்பிக்கையீனத்துடனுமே வாழ்வதையும் தம் துறைகளில் இருந்து பணிக்காலத்தின் பின் ஏழ்மையின் பிடியில் வாடும் அவலமும் தொடர்கிறது.
தமிழ்க் கலைத்துறை இன்னமும் தொழில்சார் துறையாக மாறாத அவலம் இது. அதனால் தான் தர்ஷன் மட்டுமன்றி எம் கலை, இசைத்துறையிலிருந்த பலரும் சிங்களத்தை நாடித் தம் திறமையின் வாயிலாகத் தமக்கான இடத்தைத் தக்கவைக்க முயல்கின்றனர்.
தர்ஷன் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி தான்.
தனக்கான அன்பு காட்டும் பலரையும் தனது குடும்பத்துக்கான வழியையும் சம்பாதித்துவிட்டுப் போயிருக்கிறான்.
அடையாளத்தை உருவாக்க சிரமப்பட்டவன் சிறப்புடன் விடைகொண்டிருக்கிறான்.
மரணத்தின் பின் அன்பையும் அக்கறையையும் காட்டி அனுதாபிப்பதை விட ஏழ்மை நிலையில் வாடும் எம் கலைஞர்களை வாழும்போதே வாழ்விக்கும் வழியையும் வருங்காலத்துக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்த ஒன்றுபட்டு செயற்படும் களம் ஒன்று உருவாக்கப்படட்டும்.