ஒலிவாங்கிக்கு முன்னான 20 வருடங்கள் அறிவிப்பாளர் கிருஷ்ணா

அறிவிப்பாளர் கிருஷ்ணா தனது 20 வருட வமொளி பயணம் தொடர்பாக முகப்புத்தக பதிவொன்றை இட்டுள்ளார்.

”ஒலிவாங்கிக்கு முன்னான 20 வருடங்கள்” 🎙

2002ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில், எந்த வானொலி/அறிவிப்புத்துறை அனுபவமுமில்லாத ஒருவனாக, சூரியன் FM க்குள் நுழைந்து, கற்றுத் தெளிந்து – பட்டுத் தெளிந்து மனிதர்களையும் அனுபவங்களையும் சேகரித்துக் கடந்துவந்த பாதை 20 வருடங்களைக் கடக்கிறது என்று காலக்கணக்கு சொல்கிறது.

அதற்கு முதல் நாள் என்ன – அன்று காலை விடியும்வரையில் “ஒரு வானொலி அறிவிப்பாளனாவேன்” என்று நானே நம்பியிருக்கவில்லை. அதுவரையில் சற்றும் தொடர்பில்லாதிருந்த ஒரு துறை என்னை ஈத்து உள்ளிழுத்து, இன்று என்னை எப்படி ஆக்கிவிட்டிருக்கிறது என்று நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அடிக்கடி, ”இனிப் போதுமடா சாமி” என்று வானொலியை விட்டு ஓட முயற்சித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம், தலையில் குட்டி மீண்டும் ஒலிவாங்கிக்கு முன்னே என்னை இழுத்துவந்து இருத்தி, “இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது” என்று சொல்லிக்கொண்டிருக்கிறது காலம். இனியும் இந்தக் கண்ணாமூச்சி தொடரும் என்று மனம் சொல்கிறது.இத்தனை காலத்தில் நான் சேர்த்துக்கொண்டவற்றைக் கணக்கிட்டால், பிரதிபலன் பாராமல் பேரன்பை அள்ளித்தருகின்ற அன்பான நேயர்களும், வேலை சார்ந்த மனிதர்களால் பெற்றுக்கொண்ட அளவிட முடியாத அனுபவங்களும், என்னோடு பயணித்த, பயணித்துக்கொண்டிருக்கிற சக அறிவிப்பாளர்களுடைய அன்பும் நம்பிக்கையுந்தான்.

இன்னொரு தலைமுறையோடும் இந்தத் துறையில் தாக்குப்பிடிக்க புதிது புதிதாக இப்போதும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

வானொலித்துறைக்குள் இணைத்து அங்கீகரித்த அமரர் நடராஜசிவம் (நடா அண்ணா) அவர்களுக்கும், நடைபழகக் களம் தந்த சூரியன் FM க்கும், கைபிடித்து ஒலிவாங்கிக்கு முன்னால் பேசவைத்த லோஷன் அண்ணருக்கும், பயிற்சியையும் அனுபவத்தையும் அள்ளித்தந்த என் மூத்த அறிவிப்பாளர்களுக்கும் என்றென்றும் நன்றி. 🙏🙏🙏இதுவரை தெரிந்துகொண்டதை இளையவர்களோடும் பகிர்ந்துகொண்டு இன்னும் பயணம் தொடரும்.

அறிவிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!