நவம்பர் 4 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வௌியாகும் வரை சுயாதீன தொலைக்காட்சி சேவையில் அரசியல் பின்புலத்துடனான அனைத்து நேர்காணல்கள், விவாதங்கள், நேரடி ஔிபரப்புகளை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்து, ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டு ஔிபரப்புமாறு கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள ஊடக அறிவுறுத்தல்களை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையிலும், கடந்த 30 ஆம் திகதி ஔிபரப்பான நிகழ்ச்சியொன்றில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான விடயம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.