ஜனாதிபதி தலைமையில் சர்வதேச சுற்றாடல் தின விழா

சர்வதேச சுற்றாடல் தின விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்றது.

சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அவர்கள் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன். வளி மண்டல தரவுகளை அளவிடும் ஊர்தியை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

சுற்றாடல் உறுதிமொழியை ஏற்றதன் பின்னர் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.

வளி மற்றும் நீர் தர நிர்ணய பிரிவுகள் தொடர்பிலான இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்துவைத்தார்.

வாகன புகை வெளியேற்றம் பற்றிய நிதியத்தினால் வழங்கப்படும் புகை அளவீட்டு பிரிவு ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

பேண்தகு வன முகாமைத்துவத்திற்காக வளி மாசடைதலைக் கட்டுப்படுத்தல், வழிகாட்டுதல் தொடர்பான கையேடும் “சொபாகெத” சஞ்சிகையும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

2019 சர்வதேச சுற்றாடல் தினத்திற்கு சமகாலத்தல் ஜனாதிபதி அவர்கள் கைச்சாத்திட்டுள்ள புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானியை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள 27 ஹெக்டெயர் விஸ்தீரமுள்ள சென்டிக்காடு மணல் மேட்டினை அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசமாக பெயரிட்டு அதனை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியிடப்பட்டது.

அதேபோன்று வனரோபா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 14 அரச அலுவலகங்களில் நாற்றுமேடைகளை அமைப்பதற்கு 21.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கான உறுதிமொழிப் பத்திரம் ஜனாதிபதி அவர்களால் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

புனரோதய தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

சூழல்நேய கண்டு பிடிப்பொன்றினை உருவாக்கிய இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரியின் மாணவி தருஷி ராஜபக்ஷவை பாராட்டி அவரின் எதிர்கால பணிகளுக்காக 15 இலட்சம் ரூபா நிதியுதவியையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.

இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரியின் உயர்தர கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி தருஷி விதுசிகா ராஜபக்ஷ சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புக்களை நாட்டுக்கு வழங்கியுள்ளதுடன், லஞ் சீட்டுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய சூழல்நேய பை ஒன்றையும் அவர் நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், கல்விமான்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!