ஜனாதிபதி ஊடக விருது – 2018 : 3 விருதுகள் வீரகேசரிக்கு

அதி சிறந்த ஊடக கலாசாரத்திற்கான ஜனாதிபதி ஊடக விருது 2018 இல் வீரகேசரி 3 விருதுகளை தட்டிச்சென்றது.

உயர் ஊடக கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்களினால் ஆற்றப்படும் பணி மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலான ‘ஜனாதிபதி ஊடக விருது விழா” ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்டின் சிறந்த பத்தி அறிக்கைக்கான விருது வீரகேசரி வார இதழின் ஆர்.ராம்குமாருக்கு கிடைத்தது.
ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரத்திற்கான விருது எஸ். தர்மதாஸிற்கு வழங்கப்பட்டது.

இணையத்தள பிரிவில் ஆண்டின் சிறந்த பல்லூடக பயன்பாட்டுக்கான இணையத்தளத்திற்கான விருது வீரகேசரி இணையத்தளம் சார்பில் வீ. பிரியதர்சனுக்கு கிடைத்தது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகிய நான்கு ஊடகங்களிலும் மும்மொழிகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை வெளியான ஆக்கங்கள் இவ்விருது வழங்கலுக்காகப் பரிசீலிக்கப்பட்டன.

அந்தவகையில் 4 ஊடகப்பிரிவுகளும் உள்ளடங்கலாக மும்மொழிகளிலுமாக மொத்தம் 47 விருதுகளும், வாழ்நாள் விருதுகள் நான்குமாக மொத்தம் 51 விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் வாழ்நாள் விருதுகள் பத்திரிகைத் துறையில் ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸவுக்கும் வானொலி ஊடகத்தில் ஊடகவியாலாளர் கருணாரத்ன அமரசிங்கவுக்கும் தொலைக்காட்சி ஊடகத்தில் லுஷன் புலத்சிங்கள மற்றும் இணைய ஊடகத்தில் ஊடகவியலாளர் லக்ஷ்மன் ஜயவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!