மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்றிரவு (29) வெள்ளிக்கிழமை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் மூன்று வாலிபர்கள் உடல் கருகிப்பலியானர்கள். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நான்கு இளைஞர்கள் அதிக வேகத்துடன் ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் மற்றையது மோதியதையடுத்து எரிபொருள் தாங்கி வெடித்து தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அதில் சிக்கியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வாகன நெரிசலினால் மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதிப்போக்குவரத்து இரண்டு மணி நேரம் சீர்குலைந்தது.
இவ்விபத்தில் மட்டக்களப்பு- பலாச்சோலை 22 வயதுடைய மோகநாதன் மயுரன் 23 வயதுடைய முருகப்பிள்ளை பவித்திரன் மற்றும் காத்தான்குடியைச்சேர்ந்த 21 வயதான எம்ஏஎம்.அத்தீப் ஆகிய வாலிபர்களே உயிரிழந்தவர்களென அடையாளங்காணப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.