ஸ்டார் தமிழ் மற்றும் சூரியன் வானொலிகளில் பணிபுரிந்த SK ஷாந்த் தனது ஊடக பயணம் தொடர்பாக நாம் கேட்ட விடயத்திற்கு மிகவும் சிறப்பாக பதில் வழங்கியுள்ளார்.
2011ம் ஆண்டு சாதாரண தரம் கற்கும் போது ஏற்பட்ட ஊடகத்தின் மீதான காதல், உயர்தரம் கற்கும் போது வெறித்தனமான பேரார்வமாக மாறியது. அதனால் பாடசாலைக் கல்வியின் போதே பத்திரிகையொன்றில் பகுதி நேரமாக வேலை செய்தேன். அதே நேரம் சில பத்திரிகைகள், வானொலிகள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வாய்ப்புக் கேட்டு கடிதம் அனுப்புவது அப்போது எனது வாடிக்கை.
அத்தோடு எனது ஊரில் நடக்கும் நிகழ்வுகளை எனது கமராவால் படம்பிடித்து செய்தியாக எனது பழைய முகநூலில் பதிவேற்றம் செய்த போது ஊடகவியலாளனாகவே என்னை உணர்ந்த காலம் அது. உயர்தரத்தின் பின்னர் ( 2014 ) சில மனக்குழப்பங்கள் காரணமாக ஊடகக்கனவை ஒரு புறமாக வைத்துவிட்டு வேறு துறைக்குள் சென்றுவிட்டேன். இருந்தாலும் மனது எப்போதும் ஊடகத்துறையின் மீதே காதலோடு இருந்தது…
சில கால தவிப்புகளுக்கு பின்னர் யாழில் ஒரு இணைய வானொலியில் 2018 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி அறிவிப்பாளராக எனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்தேன்.
அதன் பிறகு அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். பல அவமானங்கள், தோல்விகளை, விமர்சனங்களைக் கடந்து பல போராட்டங்களின் பின்னர் ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிரபல வானொலியான Startamilradio 90.4 & 90.6 அலைவரிசையில் பணியாற்ற நவா அண்ணா (புன்னகை மன்னன் நவநீதன்) வாய்ப்பளித்தார்.
அவர் தந்த அந்த வாய்ப்பு எனக்கு என்னை அறிவிப்பாளனாக அடையாளப்படுத்திக்கொள்ள என் வாழ்நாள் கனவை நிறைவேற்றிக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
அன்று மே 5 2021 என் குரல் அலைவரிசையொன்றில் ஒலித்த முதல் நாள் என்னால் மறக்கமுடியாது.
அதன் பின்னர் முதல்வன் சூரியனில் எனக்கு வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு முடிந்தவரை, என் நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களை சந்தோஷப்படுத்த முயற்சிசெய்தேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது.
முக்கியமாக எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த நிகழ்ச்சி சூரியனின் “ரீங்காரம்” நிகழ்ச்சி. அண்ணா உங்கள் குரல் மற்றும் கவிதை வாசிக்கும் விதத்துக்கு நாங்கள் ரசிகர்கள், உங்கள் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நேயர்கள் கூறிய அந்த வார்த்தைகள் மறக்கமுடியாதவை.
இந்த சந்தோசமே என் வாழ்நாளுக்கு போதுமானது. இன்றோடு ஊடகத்துறையிலிருந்து தனிப்பட்ட ஒரு சில காரணங்களினால் விடைபெறுகிறேன். மீண்டும் வானொலித்துறைக்கு வருவேனா என்று தெரியவில்லை. அனைவரது அன்புக்கும் நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்…