தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேற்படி சந்திப்பு அமைச்சரவை கூட்டம் இடம் மற்றும் நேர மாற்றம் காரணமாக திட்டமிட்ட வகையில் இடம்பெறாத நிலையிலேயே சந்திப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், அமைச்சரவையில் இலங்கை தேயிலை தொடர்பான உரையாடல் எழுந்தவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் ஆகியோர் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் தோட்டத் தொழில்ளர்களின் சம்பளப்பிரச்சினை தொடர்பாக பிரஸ்தாபித்துள்ளனர்.
இதற்கும் மேலதிகமாக இன்று மாலை நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற ஆளும்கட்சி குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் நாளைய பேச்சுவார்த்தையின்போது தீர்க்கமான முடிவு ஒன்றினை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.