தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்  

அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் மனோ கணேசன் அழைப்பு

 
மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன. இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.
 
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,          

21ம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள். 
 
தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன. இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
 
ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு. ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி  திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம்  வட-கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர்… என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
 
தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.           
 
 
எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக  அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம். பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரக்க கூறினேன்.   
 
இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சி தலைவர்களையும், எம்பீகளையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!