தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.
“கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.
எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில் திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம், ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.