மட்டக்களப்பின் வர்த்தக சினிமாத்துறையில் இம் மாதம் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது மகிழ்வைத் தருகிறது.
இம்மாதம் 15 ம் திகதி வெளியாகி வரவேற்பு பெற்ற எனக்குள்ளே திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் பிரேமலக்சன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “ரிச்சர்ட்” திரைப்படத்தின் பிரமுகர்களுக்கான விசேட காட்சி (VIP Show) 24 – 03 – 2022 வியாழக்கிழமைமாலை 5:15 க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் காண்பிக்கப்பட்டது.
1மணி 10 நிமிடங்கள் திரையில் விரியும் ரிச்சர்ட்டின் ஒவ்வொரு காட்சியும் மிகச்சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.படம் முழுக்க இரவுக் காட்சிகளாகவும் பகல் பொழுதுகளும் ஓர் மங்கிய ஒளியில் கதாநாயகனின் குழம்பிய மன நிலையை காட்டுவது போல் படமாக்கியிருக்கும் விதமும் ஒளிப்பதிவும் அபாரம்.
2.25 லட்சம் ரூபா செலவில் 1மணி 10 நிமிட Mid Length movie யை எடுக்க முடியுமென்றால் தமிழ்நாட்டு சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் எங்கள் தாயக தயாரிப்பாளர்கள் எம் இளைஞர்களை நம்பி முதலிட்டால் எவ்வளவு நல்ல திரைப்படங்கள் இங்கு வெளிவரும்.
தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் தனிமை விரும்பியாக வளர்க்கப்பட்டதனால் தனது திருமண வாழ்வின் பின்னரும் தனிமையையும், தன்னை எவரும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற மனநிலையையும் கொண்டவன் ரிச்சர்ட்.
அவனது மனப்பிறழ்வான நிலையையும், தனிமை நாடலையும் உணர்ந்து பிரிந்து செல்லும் மனைவி.அதன் பின்னர் வீதி குப்பைத்தொட்டியில் கிடக்கும் ஓர் Modeling பொம்மையை எடுத்து வந்து அதற்கு ஆடை அலங்காரம் செய்து அதனுடன் குடும்பம் நடத்தும் ரிச்சர்ட்.
எதுவும் கேள்வி கேட்காத, பேசாத அந்த பெண் பொம்மை அவனுக்கு பிடித்துப்போகிறது. அதனுடன் தானே பேசி, பழகி, வாழ்ந்து வருகையில் தனது ஆடைகளை எடுத்துச் செல்ல வரும் அவனது மனைவி தனது ஆடைகளை ஒரு பெண் பொம்மை அணிந்திருப்பதைக் கண்டு ரிச்சர்ட்டுடன் சண்டையிட்டு அந்த பொம்மையை வெளியே வீச முற்படுகையில் அவளை கொலை செய்து விடுகிறான் ரிச்சர்ட்.
அதன் பின்னர் தனது மனைவியின் பிணத்தை பல தடவைகள் அப்புறப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் அருகில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் தலையீட்டால் அது தடைப்படுகிறது.
பல தடவை முயற்சித்தும் முடியாத நிலையில் மன நோயின் உச்சத்தில் அவன் எடுக்கும் முடிவுதான் படத்தின் உச்சம்.
ரிச்சர்ட் என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் நடிகரின் உடல் மொழியும், நடிப்பும் அபாரம். இடையிடையே வீட்டு உரிமையாளராக வந்து கலகலப்பூட்டுகிறார் நடிகரும், இயக்குனருமான கோடீஸ்வரன்.
ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருப்பவரும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.மொத்தமாகவே மூன்று பாத்திரங்கள்தான். இதை வைத்து ஒரு மணி நேர கதை சொன்ன இயக்குனர் பாராட்டப்படவேண்டியவரேபடத்தின் இசையும் இங்கு மிகச் சிறப்பாக படத்துடன் இணைந்து பயணிக்கிறது. சினிமா தொடர்பில் மூன்று விதமான கருத்து நிலைகள் உள்ளன.
பொழுது போக்கு சாதனமே சினிமா. சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் மகிழ்வுடன் செல்லவேண்டும் என்பது.இரண்டாவது சினிமா ஓர் சமூக ஊடகம் அதன் மூலமாக சமூக கருத்துக்கள் வெளிப்படவேண்டும். என்பது.
இதையும் தாண்டி கலை சினிமா (Art film) என ஒரு சிலர் வித்தியாசமான கோணங்களில் படம் எடுக்க முயல்வதுரிச்சர்ட் பொழுது போக்கு சினிமாவா? சமூக சினிமாவா? கலை சினிமாவா என்பதை பார்வையாளர்களே தீர்மானிக்கட்டும்.
மட்டக்களப்பின் வர்த்தக சினிமா ஓர் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது.
பல இளைஞர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள், அது மட்டுமன்றி பல தயாரிப்பு நிறுவனங்களும் படம் தயாரிக்கத் தொடங்கிவிட்டன என்பது மட்டுமே இங்கு முக்கியம்.
பல தளங்களில் இருந்தும் பல வடிவங்களில் சினிமாக்கள் வெளிவரட்டும்.இப்போதைக்கு அனைத்து முயற்சிகளையும் வரவேற்போம்.அதுவே நாளை மட்டக்களப்பின் சினிமா துறையில் ஓர் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்
மைக்கல் கொலினின் முகப்புத்தக பக்கத்தில் இருந்து பெறப்பட்ட விமர்சனம்