நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் – ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.