கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் இன்று (29) குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர்.
இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக 24 மாத கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மூவருக்கும் தலா 25 ஆயிரம் டொலர்கள் வீதம் அபராதமாக விதிக்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது உயிர்க் குமிழி முறையை மீறி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு இவர்கள் மூவரும் டரம் பிரதேசத்தில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வீடியோ ஆதாரமும் வௌியிடப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வீரர்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துவதற்காக 5 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.