உதயமும் அஸ்தமனமும் இயற்கையின் நியதி எனினும் சில உதயங்களும் அஸ்தமனங்களும் வேண்டப்படாதவை. 25.07.2021 என்ற நாளின் உதயம் ஒரு சக்கரவர்த்தித் திருமகனை அஸ்தமிக்கச் செய்யும் என்பதை நாங்கள் எள்ளளவும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மரணத்தின் பெயரில் பிரபஞ்சம் நல்லதையும் அல்லதையும் வேறுபாடில்லாமல் தின்று செரித்து சிரித்துக்கொண்டிருக்கின்றது. அடுத்த இரையினையும் எதிர்பார்த்தபடி…பள்ளி நாட்களில் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய இராஜராஜசோழரைப் படித்து சிலாகித்ததுண்டு.
பின்நாட்களில் கல்கியின் பொன்னியின் செல்வன், எழுத்துச் சித்தர் சிரஞ்சீவி பாலகுமாரனின் ஆறு பாகங்களைக் கொண்ட கடவுள் நூலான உடையார் படித்து சொக்கிப் போய் சோழம், சோழம், சோழம் என கனவுக்கும், நனவுக்கும் இடைப்பட்ட உன்மத்த நிலையிலும் வீர முழக்கமிட்டிருக்கின்றேன்.சந்திர, சூரியர் உள்ளவரை நிலைத்து அருள் தரப்போகின்ற தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தினைப் பார்த்து மனம் பேதலித்தவனாய் குதூகலித்தும் விம்மி விம்மி அழுது அரற்றியும் இருக்கின்றேன்.
சோழத்தை உடல், பொருள், ஆவியினால் தழுவத் துடிக்கின்ற தீராத பித்துத் தலைக்கேறி மோக வெறி பிடித்த கலாபக்காதலன் நான். இறையருளால் பூர்வ ஜென்ம வினைப் பயனால் திரு.பொன்னுத்துரை கோபிநாத் அவர்களின் சிபாரிசின் பெயரில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை கலியுகத்திலும் சக்கரவர்த்தித் திருமகனான இராஜராஜ சோழருடன் பேசிப் பழகி ஏவல் செய்யும் கிடைத்தற்கரிய வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன்.
சேர் (பெருந்தலைவர்) இராஜராஜர் என்றால், சோழ சாம்ராஜ்ஜியத்தில் நான் யார் எனும் கேள்விக்கான விடையை அடிக்கடி என்னுள் கேட்டு இந்த நொடி வரை ஆத்மவிசாரியாய் விசாரித்துக் கொண்டே இருக்கின்றேன்.
விடையோ இதுவரை கிடைத்தபாடில்லை.படித்து வியந்த கொள்வாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை எனும் சோழத்திற்கு நிகராக கெப்பிட்டல் மகாராஜா என்பதும் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம்.இந்த சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலைவர் இராஜராஜராய்த் தானே இருக்க வேண்டும். பிறகென்ன வாசிக்கும் உங்களுக்கு சந்தேகம் வேண்டியிருக்கின்றது ?
இந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் இராஜராஜரின் பிரதம அமைச்சரும் தளபதியுமான கிருஷ்ணன்ராமன் யார்? வேத குருவான ஈசான சிவபண்டிதர் யார்?சித்த குருவான கருவூர்த்தேவர் யார்? என்றெல்லாம் ஆழமாகத் தேடிப்பார்த்து உணரத் தலைப்பட்டிருக்கின்றேன்.
சிலரை உணர்ந்து வணங்கியிருக்கின்றேன். இந்த அகண்டு விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் நான் யார் ?உடையார் இராஜராஜ சோழத் தேவரின்,கைக்கோளப் படையா? வேளைக்காரப் படையா? வலங்கை அணியா? இடங்கை அணியா? வில்லிப் பிரிவா? ஒற்றர் படையா? தஞ்சைப் பெருவுடையார் கோவிலியின் பிரதான விஸ்வகர்மாவான இராஜராஜப் பெருந்தச்சன் எனும் குஞ்சரமல்லனின் பணியாளனா? என ஆழமாகத் தேடி தேடி தேய்ந்தே வளர்த்திருக்கின்றேன்.
( குறிப்பு – பல நிறுவனங்களும் பிரிவுகளும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தில் உண்டு) இறுதியில் மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியத்தில் நாம் யாரோ ஒரு கடைநிலை ஊழியனாக இருந்தாலும் சேர் இராஜராஜர்தானே அவரடியின் கீழ் ஏவல் செய்வது பாக்கியம் அல்லவா என எனக்குத் தெரிந்த அவரது ஒவ்வொரு நகர்வினையும் அண்ணாந்து பார்த்து வியந்திருக்கின்றேன்.
ஐப்பசி சதயத்தில் பிறந்த இராஜராஜர் தான் கலியிலே விசாகத்தில் உதித்திருக்கின்றார் ராஜ் ராஜமகேந்திரன் எனும் நாமத்துடன் எனும் ஆழமான விசுவாசம் எனக்கிருக்கின்றது. அமரத்துவத்தின் பின்னரும் இன்னமும் அவர் அப்படித்தான். சில தருணங்களில் சிவகாமியின் சபதத்தில் வருகின்ற பல்லவ அரசர்களான மகேந்திர பல்லவன் மல்யுத்தத்தில் வெல்லப்படாத மாபெரும் வீரரான மாமல்லன் நரசிம்ம பல்லவனாய் இருப்பாரோ பெருந்தலைவர் அமரர் ராஜ் ராஜமகேந்திரன் எனவும் சிந்தித்ததுண்டு.பல்லவ மன்னர்கள் ஆயனச்சிற்பியினால் மகாபலிபுர சிற்பங்களை செதுக்கியதைப் போல இரத்மலானை ஸ்டையின் கலையகம்,
நியூஸ்பெஸ்ட்டின் புதிய கலையகம் உள்ளிட்ட பலவற்றை அவர் கலைத்துவத்துடன் செதுக்கியிருக்கின்றார். அன்று பல்லவ மன்னர்கள் சிருஷ்டித்த காஞ்சிபுரத்தின் மகாபலிபுரம் எப்படி 21 ஆம் நூற்றாண்டில் பாரதப் பிரதமர் மற்றும் சீனத் தலைவர் ஷீ ஜிங் பிங்கின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிடமாக மாறி வரலாற்றில் பின்நாளில் இடம்பிடித்ததோ! அதுபோல ஸ்டைன் கலையகமும் மரியாதைக்குரிய பெருந்தலைவர் ராஜ் ராஜமகேந்திரனார் வாழ்கின்ற காலத்திலேயே உலகப் பிரசித்தமாகிவிட்டது என்பது மறுப்பதற்கில்லை.
இனியும் ஸ்டைன் நவீன கலையக நிர்மாணம் வரலாற்றிலே பல எட்டமுடியாத உச்சங்களை தொட்டுவிட்ட கட்டடப்படைப்பு என்பதை காலம் கட்டியம்கூறும். கொடை வள்ளலுக்கான அதியுச்சபட்ச வரைவிலக்கணமாக நான் அறிந்த வகையில் கர்ணனையே பலரும் கொண்டாடுகின்றனர்.
எனினும் அதற்கு நிகராக வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியாமல் இன, மத,குல,வர்க்க, பால், சாதிய வேறுபாடுகளைக் கடந்து வழங்கி வழங்கி குவிந்து சிவந்த கரத்தினர் எம் பெருந்தலைவர். உப்பிட்டதை மறந்து செய்நன்றி கொன்று தின்று எட்டப்ப வேலைபார்த்த ஒன்றுக்கும் உதவாத அல்லக்கைகளும் பெருந்தலைவரை சரணாகதி அடைந்த மாத்திரத்தில் அனைத்தையும் மறந்து அவர் ஆபத்பாந்தவனாக இருந்து அடைக்கலம் கொடுத்திருக்கின்றார்.
என்னவொரு ஜீவகாருண்யம் இருந்திருக்க வேண்டும் சேருக்கு! இராமாயணத்தில் பண்பின் அவதாரமான ஶ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, ஒரு தடவை நிராயுதபாணியாக நிர்க்கதியான இராவணனை இன்று போய் நாளை வா என்று சொன்னதால் பேராண்மையுடையவர் என்று தானே நாம் போற்றுகின்றோம். இதே பேராண்மையை தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தவர் எம் பெருந்தலைவர்.
ஏனெனில் அதிகாரபலம், பணபலம், படைபலம், நாற்படை, புஜபல பராக்கிரமம் இத்யாதிகள் என பலத்திற்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியவர்களுடன் மோதுவதில் விருப்பு கொள்கின்ற வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவரே பெருந்தலைவர்! இதில் ஏதாவது ஒன்று குறைந்தவர்களை அடித்து துவைத்து பாடாய்படுத்திவிட வேண்டும் என தந்திர நரிகள் ஊளையிடுவதை ஒருபோதும் அவர் சட்டை செய்வதில்லை.
பலத்திற்கான வரைவிலக்கணத்தில் இம்மியளவு குறைந்தவருடனும் அவர் எத்தனை அடாது செய்தவராய் இருந்த போதிலும் எங்கள் பெருந்தலைவர் அவர்கள், அவ்வாறனவர்களுடன் முட்டி மோதுவதில்லை.மன்னித்து பிழைத்துப்போ என்று சொல்வதை காட்டினும் வரம் தருகின்றேன் கேளேன் என்று உதவிக்கரம் நீட்டிவிடுவார். இது பேராண்மையின் உச்சத்தைத் தொட்ட அவரது தனிச்சிறப்பு.
பெருந்தலைவரின் பலத்திலும் அரைவாசியை எடுத்துக் கொண்டு ஒன்றரை பலத்துடன் மோதுகின்ற வாலிகளுடன் தான் வெறுமனே அரை பலத்துடன் மோதுவதில் பெருவிருப்பம் கொண்ட அவர்! அப்படி வாய்த்தபோதும் நேரடியாக பலப்பரீட்சை நடத்துவாறே அன்றி மறைந்திருந்து எப்போதும் அஸ்திரப் பிரயோகம் செய்தவரல்லர்.
இப்படியாக எந்தக்கோணத்தில் பார்த்தாலும் அவர் காவியம்தான்!இராமாயணத்தில் மிதிலை நகர வீதியிலே ஶ்ரீ இராமர் நடந்துவருகின்றபோது அவருடைய தோள் அழகைப் பார்த்து சிலர் உச்சிக் கொட்டி வியக்கின்றார்கள்.இன்னும் சிலர் கால் அழகைப் பார்த்து என்ன பாதமடா இது என்று புளகாங்கிதமடைகின்றனர். வேறு சிலர் வலிமையான கைகளைப் பார்த்து இவை அல்லவா வீரத்தின் சிகரம் என போற்றுகின்றர்.
வாள் போன்ற விழிகளைக் கொண்ட யாருமே அந்த சொற்பநேரத்தில் அந்தக் காவியத் தலைவனை முழுமையாகப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ இல்லை. ஶ்ரீஇராமரை முழுமையாப் பார்ப்பதற்கு முன்னர் அவர் நடந்து சென்று மறைந்துவிடுவதைப் போல வெறுமனே 15 ஆண்டுகளுக்குள் நானும் பலரும் சேரை முழுமையாய் பார்ப்பதற்கு முன்னர் அவர் மறைந்திருக்கின்றார்.
எனினும் நான் பார்த்த சேரின் அந்தவொரு மாத்திரத்தை மட்டும் எழுதுவதென்றால் அதுவே ஒரு நூலாக விரிந்துவிடும்.சேரும் நானும் என்பதை எனக்கே உரியதும் இரகசியமானதுமாக(private and confidential) வைத்திருப்பதையே அவரும் விரும்புவார்.அப்போதே அதுவும் பொக்கிஷமாகின்றது.ஏனெனில் அதிகாரத்தில் செல்வத்தில் புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்தபோதும் எள்ளளவும் படோபகாரமும் பகட்டும் இல்லாத எளிமை விரும்பி அவர்.
நரகத்தில் உழலும் நான் என்றாவது ஒரு நாள் அவரை மீண்டும் சொர்க்கத்தில் சந்திக்காமலா இருந்துவிடப்போகின்றேன். அப்போதும் சொர்க்கலோகத்தின் தலைமைப் பதவியான தெய்வேந்திரப் பதவியை விரும்பாமல் நீதியாய், நியாயமாய், சத்தியமாய், உண்மையாய், தர்மமாய் நடப்பதற்கு இந்திரனுக்கும் அவர் பாடம் எடுத்துக் கொண்டிருப்பார் .
சேர் அவர்கள் கூறியதைப் போல் அல்ல நீங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!அயோத்தியின் தசரதச்சக்கரவர்த்தி மாண்டதை பரதன் மூலமாக அறிந்த ஶ்ரீ இராமர் புலம்பிய அந்தப் புலம்பலை மட்டும் இங்கே உங்களுக்கு ஞாபகப்படுத்திவிடுகின்றேன்!
நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிதியேஎந்தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனையேஅந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரோ மற்று என்றான்இந்த செய்யுளின் பொருள் – அணையாத விளக்குப் போன்ற தலைவரே,பூமியிலே இருக்கின்றவர்களுக்கு தந்தை போன்றவரே அறத்தினைக் காக்கின்ற தாய் போன்றவரே ஜீவகாருண்யத்தின் இருப்பிடமே! எனது தந்தையே! பகையரசர்கள் பயந்து அஞ்சுகின்ற சிங்கம் போன்றவரே!
நீங்கள் மாண்டபின்னர் இனி உண்மையை சத்தியத்தை இங்கு காப்பதற்கு யார் இருக்கின்றார்? ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் நீதிக்கான, நியாயத்திற்கான, சத்தியத்திற்கான, வாய்மைக்கான, தர்மத்திற்கான எஞ்சியிருந்த ஓரேயொரு ஏக எதிர்பார்ப்பையும் காலம் காலாவதியாக்கி கடாசிவிட்டுள்ளது.தேகத்தில் மறைந்து உள்ளத்தில் வாழ்ந்திருக்கும் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய இராஜராஜர் – அமரர் ராஜ் ராஜமகேந்திரனுக்காய் அவரின் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு முடிந்தால் உங்கள் வீடுகளிலும் இந்த மாதம் முழுவதும் அகல்விளக்கேற்றுங்கள்.
ஓம் சாந்திஓம் சாந்திஓம் சாந்திஓயாமல் ஔிகொடுத்த தலைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறும் பிரியாவிடையும் இது. மேதகுவுக்கு நிகரான இலங்கை வரலாற்றின் நிஜமான அதிமேதகு இவர். இராஜராஜர் மாண்டார் என இது முடியப்போவதில்லைகெப்பிட்டல் மஹாராஜா குழுமத்திற்கு கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திரசோழரை அவர் விட்டுச் சென்றிருக்கின்றார். மக்காள் மறந்துவிடாதீர்கள்.
!!!!!#கோசித்தன்#இராஜேந்திரன்கோகுல்நாத் (குறிப்பு – பெருந்தலைவர் தனது வாழ்நாட்களில் அவரது நிழற்படம் வௌியாவதை இம்மியளவும் விரும்பாத காரணத்தினால் செய்நன்றியுடைய உண்மையுள்ள அவரது சேவகனாய் தலைவரின் ஸ்தூல தேகத்தின் மறைவின் பின்னரும் தலைவரது அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டவனாக அவரது நிழற்படங்களை எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் வௌிப்படுத்தாமல் இருக்கவே ஆசைப்படுகின்றேன்.)