ஷஜீவன் லோகநாதன் மற்றும் சகிஷ்ணா சேவியர் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.என்.விஷ்ணுஜனின் இயக்கத்தில் உருவான “பேச மறுப்பதென்ன..!” காணொளிப்பாடல் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுவருகின்றது.
வருண் துஷ்யந்தனின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கு சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார். விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற ஆனந்த் அரவிந்டக்ஷான் மற்றும் ஸ்ரீநிசா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
ட்ரியல் டக், தரு கங்காதரன், கோடீஸ்வரன், சங்கீதா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவு அச்சுதன். படத்தொகுப்பு மற்றும் இயக்கம் எஸ்.என்.விஷ்ணுஜன்.
“ஜாதி, மத பேதம் காதலுக்கு இல்லை” என்ற ஒற்றை வரியை மெய்ப்பிப்பது போல பாடல் அழகாக திரைக்கதை அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாயகன் கிறிஸ்தவன். கழுத்தில் சிலுவை தொங்குகின்றது. நாயகி இந்து. ஆரம்பக்காட்சியில் நாயகியின் குடும்பம் கோயிலுக்குச் செல்கின்றது. எடுத்த எடுப்பிலேயே பாடல் கதைக்குள் பார்ப்போரைக் கொண்டு சென்று விடுகின்றார் இயக்குனர்.
பேச மறுப்பதென்ன – நீ என்னை வெறுப்பதென்ன என ஆரம்பிக்கும் பாடல் வரிகளில் காற்றே தீரும் காலம் காதலும் அதுவரை வாழும், பூகோளம் ஓயும்வரை அடி ஓயாதோ எந்தன் நிலை, காற்றாகிக் காவல் தாண்ட என் ஜீவன் ஏங்குதே மூங்கிலும் பாடுமோ எரிகின்ற போது எனப்பல வரிகள் காதலின் ஆழத்தைப் பேசுபவையாக அமைந்திருக்கின்றன. பாடலாசிரியர் வருணுக்கு ஒரு சபாஷ்.
அழகாக மெட்டமைத்து இசைகளைக் கோர்வையாக்கி நாங்கள் பேச மறக்காத ஒரு பாடலைத் தந்திருக்கின்றார் இசையமைப்பாளர். பாடலைப்பாடியவர்கள் பற்றி நாங்கள் குறிப்பிடத் தேவையில்லை. அவர்கள் பல இசை ஜாம்பவான்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.
காணொளிப்பாடலில் ஒளிப்பதிவாளர் அச்சுதனும் படத்தொகுப்பாளர் கம் இயக்குனர் விஷ்ணுஜனும் போட்டி போட்டு பணியாற்றியிருப்பது தெரிகின்றது. கவிதை போல ஒவ்வொன்றும் அழகான பிரேம்கள்.
நடித்திருப்பவர்கள் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ட்ரியல் மற்றும் தரு. இருவரது முன்னைய பாடல்களுடன் ஒப்பிடும் போது இது பெஸ்ட் எனக்கூறும் அளவிற்கு அவர்களின் ஜதார்த்தமான நடிப்பு இருக்கின்றது.
இன்னொரு விடயம், இந்தப் பாடலை இந்தியாவின் Behindwoods இணையத்தளம் அவர்களது யு-ரியூப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். இது எம் படைப்புக்களுக்கான அங்கீகாரம் மாத்திரம் இன்றி பாடல் இன்னும் பலரையும் சென்றடைவதுடன், எம்மவர்களின் திறமைகளையும் தென்னிந்தியாவில் பலரும் பார்க்கக்கூடியதாக இருக்கும். அண்மையில் வெளிவந்த ஜெனோசனின் “இறகெனும் நினைவுகள்” பாடலை விகடன் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இவ்வாறான வெளியீடுகள் எம்மவர்களுக்கான உந்து சக்தியை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.