எழுத்துக்களின் வீரம் விடைபெறுகிறது | வீரகத்தி தனபாலசிங்கம்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் இடதுசாரித் சிந்தனைத் தடத்தில் தோழராக நண்பராக மக்கள் சார்புநிலைப் பத்திரிகையாளராகத் தினக்குரல் நாளிதழின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது விடை பெறுதலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீரகேசரியில் எனது சேவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.இறுதி ஆறு மாதகால ஒப்பந்தம் நிறைவடைகிறது.பத்திரிகை நிறுவனமொன்றில் மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டுமோ இல்லையோ நானறியேன்.

வீரகேசரியில் 1977 செப்டெம்பரில் 21 வயதில் ஒப்புநோக்காளராக இணைந்த நான் சுமார் நான்கரை தசாப்தங்களாக, இடையில் ஒரு குறுகிய காலகட்டம் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆங்கில ஆசிரியப்பணி தவிர, எனது வாழ்வை பத்திரிகைத்துறைக்கே அர்ப்பணித்துவிட்டேன்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் எழுத்தாளர் முருகபூபதியும் நானும் வீரகேசரியில் ஒன்றாக இணைந்தவர்கள்.

வீரகேசரியில் எனது சேவை இரு கட்டங்களிலானது. 1977 — 1997 , 2015 — 2021 என்று அதை பிரிக்கலாம். 1997 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தினக்குரல் ஆரம்பிக்கும் பணிகளுக்கு உதவியாக செயற்பட்டு அதன் பிரதம ஆசிரியராகி ஓய்வு பெற்றேன்.இந்த இரு காலகட்டங்களிலுமான அனுபவங்கள் குறித்து இங்கு விபரிக்க நான் விரும்பவில்லை.

இந்த நான்கரை தசாப்தங்களிலும் நான் ஒப்புநோக்காளராக, சப்- எடிட்டராக, வெளிநாட்டு செய்தியாளராக, பாராளுமன்ற நிருபராக, உள்நாட்டு — சர்வதேச அரசியல் கட்டுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக பத்திரிகைத்துறையின் பல்வேறு களங்களிலும் பணியாற்றியிருக்கிறேன்.

இவற்றை என்னாலியன்றவரை நான் சாதிக்க எனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வுடன் நினைத்துப்பார்க்கிறேன். தினக்குரல் பத்திரிகையை தொழிலதிபர் எஸ்.பி.சாமி அவர்கள் ஆரம்பித்தபோது மூத்த பத்திரிகையாளர்கள் பொன்.

ராஜகோபால் மற்றும் சிவனேசச்செல்வன் ஆகியோரின் வழிகாட்டலில் இளையதலைமுறை பத்திரிகையாளர்களுடன் ஏதோ விளையாட்டுப்போல அந்த பத்திரிகையை குறுகிய காலகட்டத்திற்குள் தமிழ் பேசும் வாசகர்களின் நேசத்துக்குரியதாக மாற்ற முடிந்தமைக்கு அடிப்படைக் காரணம் வீரகேசரியில் நான் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த பயிற்சியும் அனுபவமுமேயாகும்.

புதிய பத்திரிகையொன்றை ஆரம்பித்து அதில் பணியாற்றுவதில் இருக்கக்கூடிய அனுபவங்கள் எனக்கு தந்த முதிர்ச்சியே வீரகேசரியில் எனது இரண்டாவது காலகட்டத்தின் ஊடாக எதிர்நீச்சல் போடுவதற்கு கைகொடுத்தது. அந்த காலகட்டமும் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுகாலவரையில் எனக்கு வழிகாட்டிய மூத்த பத்திரிகையாளர்கள், என்னோடு ஒத்துழைத்த சக பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. கசப்பான அனுபவங்கள் இல்லாமல் இல்லை.நிறையவே உண்டு.அவற்றுக்கு காரணமானவர்களே நினைத்துப்பார்க்கட்டும்.

நான் செய்யவிரும்பவில்லை.நான் என்றென்றைக்கும் எவருக்கும் திட்டமிட்டுக் கெடுதி செய்தவனில்லை.அந்த குணாதிசயம் எனக்கு எப்போதுமே ஒரு தைரியத்தை கொடுப்பதாகும்.

வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

150மதுஷான் பாஸ்கரன் and 149 others42 comments10 shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!