பாடகர் கபில் ஷாம்
அப்பா
உலகில் மிகச் சிறந்த நண்பன் அப்பா உன் உள்ளத்தில் இருப்பதை அவர் முன்னே சென்று கூறு அவர் உனக்கு பதில் கூறுவார் அதை நீ சரியாக எடுத்து உன் இலக்கினை
நீ அடைவதற்கு அவர் ஆசிர்வாதம் உனக்கு இருந்தால் உன் வாழ்க்கையில் நீ அடைவது வெற்றி
தாய் தந்தை உடன் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஏ அன்னையர் தந்தையர் தினம் தான்
Happy fathers Day
ஊடகவியலாளர் கலாவர்ஷி
தாயுமானவர்
அன்னையர் தந்தையர் தினத்திற்காக நான் பெருமைகூறும் பதிவுகளை ஒருபோதும் இட்டதில்லை. படிப்பினைக்காக சில வரிகள்…
பாடசாலை காலத்தில் என்னைவிட அதிகமாக அடி வாங்கிய மகள்மார் உள்ளனரா என்று தெரியாது. அப்பா அடி பின்னி எடுத்துவிடுவார்.. அப்போது நான் அவ்வளவு குழப்படி. அப்பா வீட்டிற்குள் வந்தால் மயான அமைதியாகிவிடும் வீடு… அப்பா என்றால் அவ்வளவு பயம். (அவர் இல்லாத நேரத்தில் வீடு ரெண்டாகிவிடும் அளவிற்கு நாங்கள் மூவரும் சத்தமிடுவதாக அப்பாவிடம் அம்மா போட்டுக்கொடுப்பார்)
படிப்பு முடிந்த உடனேயே கொழும்பு வாழ்க்கை. கொழும்பில் சுமார் ஒருவருடம் அப்பாதான் வகுப்புகளுக்கு அழைத்துச்சென்றார். அடிக்கடி தூங்கிவிடுவேன். தூங்காமல் வீதிகளை சரியாக பார்த்துக்கொள் என வழிகாட்டி கொழும்பை பழக்கியவர் அவர்தான். காரணம், சுமார் 50 வருடம் கொழும்பில் வாழ்க்கையை கழித்தவர் அப்பா.
தம்பிகளுடன் என் தாய் இருக்க, தந்தையுடன் நான்… சுமார் 13 வருடங்களாக இங்கு இன்பம், துன்பம், நோய் நொடி எதுவந்தாலும் அப்பாதான் எனக்கு எல்லாம். பல சந்தர்ப்பங்களில் சமையலும் அவரே… சமைக்க கற்றுத்தந்தவரும் அவரே…
தம்பிகள் செட்டில் ஆனதும் தாய் கொழும்பிற்கு வந்த பின்னர்தான் அவர்களது அந்நியோன்யம் விளங்கியது. சமையலில் இருவரும் சரிக்கு சரியாக வேலை… அப்பா வேலை நடுவில் வீட்டிற்கு வந்தாலும் எதையாவது வெட்டனுமா, தேங்காய் துருவனுமா என அம்மாவிடம் கேட்கும்போது அசந்துவிடுவேன்…
வேலை முடிந்து வந்ததும் அவர் துணியை அவரே துவைத்து காயப்போடுவதையும் பார்த்துள்ளேன்..
காப்புறுதி அட்டையில் “க.கனகரட்ணம்“ என் பெயரை அச்சிட்டு அனுப்பிவிட்டனர். “கலாவர்ஷ்னி. க என போடச்சொல்.. உன் பெயர்தான் ஹைலைட் ஆக வேண்டும்” என்றார் அப்பா…
அம்மா ஒருதடவை பெயர் கூறும்போது அவரது அப்பாவின் பெயரை (என் தாத்தா) சேர்த்துக் கூறினார். “அம்மா… அப்பாவின் பெயரைத்தானே நீங்கள் உங்களது பெயருடன் சேர்க்க வேண்டும்?” என்றேன். அதற்கு அப்பா, “உன் அம்மாவை பெற்றவர் நானில்லையே… அவர் அவரது அப்பாவின் பெயரை பயன்படுத்துவதுதான் சரி” என்றார். எனது வீட்டிற்குள்ளேயே புரட்சியாளர்களா என்று வியந்தே விட்டேன்.
ஒருதடவை சிங்கள கையெழுத்தை வாசிக்க சிரமப்பட்டேன். “இங்கே தா நான் பார்க்கின்றேன்” என்றார். “உங்களுக்கு சிங்களம் வாசிக்க தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “எமக்கு அது தெரியும் இது தெரியும் என்று கூறுவதால் என்ன கிடைக்கின்றது? செயலில் காட்டவேண்டும்” என்றார்.
கொரோனாவின் பின்னர் வேலைக்கு போகவே கூடாதென சண்டைபிடித்து வலுக்கட்டாயமாக வீட்டில் நிறுத்தியுள்ளேன். அப்போதும் வீட்டுத்தோட்டம்தான் அவரது பொழுதுபோக்கு…
அப்பா கற்றுக்கொடுத்த வாழ்க்கை தத்துவங்கள்.
பழையதை மறக்காதே…
வாழ்க்கையை தனியாக வாழ கற்றுக்கொள். யாரிலும் தங்கியிருக்காதே…
உன்னை தாக்கினால் வாங்கிக்கொண்டு வராதே, திருப்பி அடி…
யாரேனும் சிறு உதவி செய்தாலும் அவர்களை பகிரங்கமாக பாராட்ட தவறாதே…
உன்னை ஒரு படி உயர்த்திவிட்டிருந்தாலும், இவர்களால்தான் உயர்ந்தேன், இவர்கள்தான் வழிகாட்டினார்கள் என கூறுவதற்கு வெட்கப்படாதே…
உணவை ஒருபோதும் வீணாக்காதே காரணம் நான் உணவுக்காக அதிகம் சிரமப்பட்டேன்…
தெரியாதவற்றை கூச்சமின்றி கேட்டு தெரிந்துகொள்…
இதெல்லாம் அவர் வாழ்ந்துகாட்டி கற்பித்தார். வாழும் தெய்வம், குரு என் அப்பா…
(2019ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு ஆவணத்தயாரிப்புக்காக பதுளை சென்றபோது, படப்பிப்பு முடிந்து மாலை வேளையில் எடுத்த ஒளிப்படம் இது)
ஊடகவியலாளர் கிருஷ்ணா
வாழ்க்கையில் அப்பாவுக்கான இடம் எப்போதும் தனித்துவமானது. பிரதியீடு இல்லாதது. அவர் இல்லாதபோது நினைத்துப் பார்ப்பதற்கு எண்ணற்ற தருணங்கள் நமக்குள் வாய்த்திருக்கின்றன.
ஆனால் வாழும் காலத்தில் அவற்றில் பெரும்பாலானவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. ஒருவேளை என் குழந்தைகள் பிறந்தபின்னர் அவர் இருந்திருந்தால் அதை நான் உணர்ந்திருக்கலாம்.
வயதில் கொஞ்சம் மூத்தவர்களை அண்ணா என்றும் அக்கா என்றும், அன்னை வயதில் அன்பைக் காட்டும் எவரையும் இலகுவாக “அம்மா” என்றும் அழைக்க முடிகிற நம்மால், அதேமாதிரியாக, ஒரு ஆணை “அப்பா” என்று பெரும்பாலும் அழைக்க முடிவதில்லை. அந்த ஒன்றே போதும் தந்தையின் தனித்துவம் சொல்ல.
சிறுவயது முதல் அப்பா எனக்குச் சொல்லித்தந்த கலைகள், கதைகளில் ஆரம்பித்து அவர் அழைத்துச்சென்ற இடங்கள், அறிமுகப்படுத்திவைத்த மிக முக்கிய மனிதர்கள், அவருக்காக நான் செய்த Sign language interpreter வேலைகள் ஊடாகக் கிடைத்த பெரும் அனுபவங்கள் வரை அவர் என்னுள் விதைத்தவற்றில் பாதியையாவது என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்க முடிந்தால், அதுவே பெருவெற்றி. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவருக்கும் ஞானம் போதிப்பவர் தந்தைதான். அது மட்டுமல்லாமல் தாயுமாகவும் இருக்கும் தந்தைகளும் அதிகம். அப்பா என்பவர் ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர்.
குடும்பத்தில் அவரது பங்களிப்பு ஐம்பது சதவீதமாக இருக்கின்ற போதிலும் நமது சமூகம் தாயையே முன்நிலைப்படுத்துவதால் தந்தை வகிக்கும் அந்த மிக முக்கியமான பகுதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒன்றே.
இந்த மதிப்பீட்டை வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்வதற்கும் விவாதிப்பதற்கு ஒரு தினம் அவசியம். இவ்வகையில் தந்தையர் தினம் இன்றியமையாதது.அந்த வகையில் இன்றைய நாளில் எனது தந்தையின் நினைவுகளில் மூழ்கி அவரின் கனவுகளை என் தோள்களில் ஏற்றி தொடர்ந்தும் பயணிப்பேன்.
இன்றைய தினம் தனது அப்பாவை வாழ்த்திய அனைத்து கலைஞ்சர்களுக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்