என்ன மனுஷன்யா நீ – கோபிநாத்

கோபிநாத் கடந்து வந்த தனது வருட ஊடக வாழக்கை தொடர்பாக எழுதியுள்ள பதிவு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நேரம் மே 8, 2006 நீயா நானாவின் முதல் எபிசோட் வெளிவந்து இருபத்திநாலு மணிநேரம் ஆகி இருந்தது. எதுவா இருந்தாலும் இருபத்தி நாலு மணி நேரத்துக்கு அப்புறம் தான் சொல்ல முடியும் என்ற கால அளவையும் தாண்டி, எனக்கு தெரிந்த வட்டத்திற்கு அப்பால் ஒருவரிடம் இருந்து கூட ஒரு பாராட்டோ நிகழ்ச்சி பார்த்தேன் என்ற தகவலோ கூட வரவில்லை.

‘அடி தூள் கெளப்பிட்டீங்க’ என்று ஆயிரம் போன் கால்கள் வரும் என்று எதிர்பார்க்காவிட்டாலும், ஒரு ஐந்து, பத்து பேராவது உங்கள் புதிய நிகழ்ச்சி பார்த்தேன் என்று சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.

அந்த நம்பிக்கையும் உடைந்து போன நேரத்தில் எனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு இது கோபிநாத் நம்பரா என்றது… மக்கள் யார் பக்கம் ப்ரோக்ராமை விட இந்த நிகழ்ச்சியை நீங்கள் நன்றாகச் செய்தீர்கள், வாழ்த்துக்கள் என்றார் மறுமுனையில் பேசியவர்.

அதற்கு பிறகு… இந்த பதினைந்து ஆண்டுகளில் ‘என்னா மனுஷன்யா நீ!’ என்ற பாராட்டு பத்திரத்தில் தொடங்கி ‘என்ன மனுஷன்யா நீ!’ என்ற வசவுகள் வரை வாங்கித் தீர்த்தாயிற்று. இத்தனை ஆண்டுகளில் நான் உணர்ந்து கொண்டது ஒன்றுதான். பாராட்டுகளும் வசவுகளும் என் மீது இருக்கும் பிரியத்தையும் பேரன்பையும் வெளிப்படுத்தும் வெவ்வேறு வடிவங்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நீயா நானா சமூகத்தின் ஒரு பகுதியானது.

‘உன்கிட்ட இதை சொல்லனும்னு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன்’ என்று கட்டி அணைத்தபடி அழுதவர்கள், வீட்டில் இருந்து வரும்போது ‘என் பிள்ளைக்கு கொடு’ என்று சொல்லி அம்மா குடுத்துவிட்டாங்கன்னு உள்ளங்கையில் டிபன் பாக்ஸோடு சிநேகமாய் சிரித்த தம்பி தங்கைகள், ‘உங்க மேல கோவந்தான் ஆனாலும் நீங்க சொன்னது புரியுது’ என்று ஈகோ இல்லாமல் தட்டிக் கொடுத்தவர்கள், காஞ்சிபுரம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து, ஆப்பரேஷன் தேட்டருக்கு போறதுக்கு முன்னால ‘என் அண்ணன்கிட்ட பேசனும்ன்னு சொன்னிச்சு அதான் நடுராத்திரி போன் பண்றேன்’னு தயங்கிய படியே போனில் தழுதழுத்த அந்த நபர்….நீயா நானா எனக்கு சொல்லிக்கொடுத்தது ஒன்றுதான். மனிதர்கள் அற்புதமானவர்கள்.

அவர்களின் அன்பு கோபம் இரண்டுமே ஒன்றுதான். அவர்களின் உரிமைக்கு உரியவனாக இருப்பதுதான் என் வரம். பதினைந்து வருடங்களுக்கு முன் போன் செய்த அந்த நபரிடம் அப்போதிருந்த பதட்டத்தில் அவர் யார் என்று கூட விசாரிக்கவில்லை. ஆனால் இப்போது புரிகிறது எனக்கு நீயா நானா பற்றி முதலில் நம்பிக்கை கொடுத்தவர் அந்த மனிதர்தான்… நான் எப்போதும் நம்புகிறேன்…மனிதர்கள் அற்புதமானவர்கள்.

நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!