கல்விப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மர்ஹூம் வை. எல். எம். ராஸிக்

கல்விப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மர்ஹூம் வை. எல். எம். ராஸிக்

மாவனெல்லை மண்ணில் கல்விப் புரட்சியை உருவாக்கி, துறைசார் விற்பன்னர்கள், சமூகத்தில் நற்பண்பு மிக்க பிரஜைகள் என தனது அடுத்த தலைமுறையின் தலைவர்களை உருவாக்கிச் சென்ற மாவனல்லை ஸாஹாராவின் பொற்காலத்தின் வடிவமைப்பாளரே எமது மறைந்த அதிபர் வை.எல்.எம். ராசிக் ஆசிரியர்.

அறியாமை என்கிற இருளினால் ஒளி மழுங்கிய கண்களை அறிவு என்னும் மருந்தூட்டி திறக்க வல்ல திறவுகோலே உண்மையான ஆசிரியன் ஆவார் என்கிற வரைவிலக்கணத்துக்கு அமைய வாழ்ந்து மறைந்தவர் மாவனெல்லை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் வை. எல். எம். ராஸிக் அவர்கள். 

வை. எல். எம். ராஸிக் அதிபருக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையிலான பிணைப்பு தொப்புள் கொடி உறவு போன்று பிரிக்க முடியாத உறவாகவே நிலையாக இருந்து வந்தது. இவர் இக்கல்லூரியிலே பயின்ற புகழ் பூத்த சாதனை மாணவர் ஆவார். குறிப்பாக இக்கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று கலைமாணி பட்டம் பெற்ற முதலாவது மாணவர் என்பது அவரின் முதல் பெருமை.

அவர் கற்ற சாஹிரா கல்லூரியிலேயே 1986 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை புகழ் பூத்த அதிபராக பணியாற்றி அளப்பரிய கல்வி பணிகளை மேற்கொண்டார். இவருடைய அதிபர் பதவி காலம் எமது கல்லூரியின் பொற்காலமாக அமைந்தது. இவரின் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகியன எமது கல்லூரியை வரலாற்றில் என்றும் காணாத  வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்றது. எமது கல்லூரியின் தலைசிறந்த அதிபராக தனது பெயரை முத்திரை பதித்து, மாவனல்லை சாஹிராவின் வரலாற்றில் அதிபர் திலகமாக மர்ஹூம் வை. எல். எம். ராஸிக் அவர்கள் மிளிர்கிறார்.

அவர் வேகமும், விவேகமும் நிறைந்த அதிபர் என்று பெயர் எடுத்து பாடசாலையின் நன்மதிப்பை சிகரத்துக்கு நகர்த்தி சென்றார்.

குறிப்பாக வை. எல். எம். ராஸிக் அதிபரின் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் கூடிய முன்னெடுப்புகள் காரணமாகவே சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம் தரம் உயர்த்தப்பட்டு சாஹிரா மத்திய கல்லூரியாக மலர்ந்தது. எமது கல்லூரியில் இருந்து ஒழுக்கமும், உயர் கல்வி தகைமைகளும் உடைய எதிர்கால தலைவர்களை உருவாக வேண்டும் என்பது வை. எல். எம். ராஸிக் சேரின் இலட்சிய தாகமாக காணப்பட்டது. இவர் மாணவர்களின் ஒழுக்கம் , கலை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்காக பெரிதும் பாடுபட்டது மட்டுமல்லாது பல செயல் திட்டங்களை பாடசாலையில் முன்வைத்தார். திறன்பட நடத்தியும் காட்டினார்.

இவருடைய காலத்தில் எமது கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களுக்கும் மிக அதிக அளவில் மாணவர்கள் கால் பதித்தார்கள். அன்றைய சூழலில் இது ஒரு அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆயினும் இது அவரின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு ஆகும். அகில இலங்கை ரீதியாக க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில் ஆனந்தா, நாளந்தா, ரோயல் கல்லூரிகளுக்கு அடுத்த படியாக மாவனல்லை சாஹிரா மிளிர்ந்தது என்றால் அது அந்த காலகட்டத்திலாகும். உயர்தரத்தில் நான்கு துறைகளிலும் ஒரே வருடத்தில் 35 பேர் பல்கலைகழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டது வரலாற்றுச்சான்று ஆகும். அவரது விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இன, மத, மொழி, பிரதேச பேதமின்றி தரமான கல்வியை அனைவரையும் சென்றடைய செய்ய வை. எல். எம். ராஸிக் அவர்கள் சாஹிரா கல்லூரிக்கு ஆற்றிய மகத்தான பணிகள் இன்னமும் எத்தனையோ இருக்கின்றன. அவை எமது கல்லூரியின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பதிக்கப்பட்டு உள்ளன. அதே போல பசு மரத்தாணி போல எமது கல்லூரி சமூகத்தின் மனங்களிலும் பதிந்து உள்ளன.

அதே நேரம் ராஸிக் ஆசிரியர் SLES பரீட்சையில் சித்தி பெற்று கல்வி திணைக்களத்தில் கடமை புரிந்தும் சமூகத்துக்காக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பிற்பாடு கூட எமது கல்லூரியின் வளர்ச்சி, எழுச்சி ஆகியவற்றில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருந்து வந்து உள்ளார்.

அவருடைய இறுதி மூச்சு வரை தொடர்ந்தும் கல்வி பணிகளை மேற்கொண்டார். இவரை நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

ஷம்ரான் நவாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!