விரைவில் மரணித்துவிடுவேன் |பிரகாஷ் கேஜி கேஜி க்கு வழங்கிய நேர்காணல்

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் தொடர்பாக இன்று பலர் பேசினாலும் , அவரை நேர்காணல் கண்ட பர் ஊடகவியலாளர் கேஜி கேஜி தான்.அதுவும் கேஜி கேஜி யின் முதலாவது நேர்காணலும் இது தான்.

1. உங்கள் அடையாளம் என்ன என கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

.பதில்: எழுத்து என்று தான் சொல்வேன். அதற்கான அடித்தளத்தினை முகநூல் வலைத்தளமே ஏற்படுத்தித்தந்தது. ஏனென்றால், முகநூல் பயனராகிய பின்னரே எனக்குள் இருந்த எழுத்துத்திறமை வெளிப்பட்டது. அது, ஊடகவியலாளர் எனும் அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

2. உங்கள் குடும்பம், பிறந்த, வளர்ந்த ஊர் பற்றி ஒரு அறிமுகம்.

பதில்: அம்மா, அப்பாவுடன், அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள் அடங்கலாக ஆறு பேரை கொண்டது எங்கள் குடும்பம். அதில், நான் கடைக்குட்டி. பிறந்தது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டி எனும் பனை, தென்னை, மா மரங்கள் நிறைந்த அழகிய கிராமத்தில் தான். வளர்ந்ததும் இதே கிராமத்திலேயே. எனினும், சிறு வயதில் போர்ச் சூல்நிலைகளின் போது உறவினர்கள் உள்ள ஊர்களான பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராயிலும் சில காலம் வாழ்ந்துள்ளேன்.

3. உங்களுக்கு இந்த ஊடக துறையில் சாதிக்க தூண்டிய காரணி எது ?

.பதில்: பத்திரிகை, வானொலிகள் மீது மிகுந்த ஆர்வமும், செய்திகளை படிப்பதில் இருந்த ஈர்ப்பும் ஒரு காரணியாக இருக்கின்றது. அதேபோல், “ஊடகவியலாளன்” என்ற அடையாளத்தை நானாக சூட்டிக்கொண்டதால் அதனை முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலும் முக்கியமான காரணியாகும். அந்தவகையில் தற்போது தான் ஊடகத் துறையில் இலை மறை காயாக இருந்து சாதிக்க ஆரம்பித்துள்ளேன்.

4. உங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் இது போன்று சாதிக்க உங்கள் ஒரு குடும்பம் என்ற வகையில் என்ன மாதிரியான பங்களிப்பை செய்கிறது அல்லது செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ?

.பதில்: எனது தேவையறிந்து செயற்படுவதுடன், தேவையான பங்களிப்பை எனது குடும்பத்தினர் செய்துவருகின்றனர். அம்மா இல்லை என்றால் என்னால் எதுவும் சாதித்திருக்க முடியாது. மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொள்ள அம்மா என்னை தயார்ப் படுத்துவார். அப்பாவே, அழைத்து செல்வார். அது பெற்றோரின் அளப்பரிய பங்களிப்பாகும். அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பில் நீதி கோரிய போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து அதில் பங்குகொள்ள சென்ற என்னைப்பற்றிய தகவல் புலனாய்வாளர்களுக்கு சென்றிருந்தது. ஆனாலும், அச்சம் இருந்தும் எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. எனவே, அத்தகைய பங்களிப்பை தொடர்ந்தும் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

5. சமூக ஊடகங்கள் குறிப்பாக முகநூல், இணையத்தளம் என்பன உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியாக உள்ளது ?

.பதில்: மேற்குறிப்பிடப்பட்டவைகள் நிறைவேறவும், இப்போது இந்த பேட்டியை வழங்கும் நிலையை அடையவும் முகநூல் வலைத்தளம் மட்டுமே எனக்கு முழுமையான பேருதவியாக அமைந்துள்ளது. முகநூல் இல்லை என்றால் நிச்சயம் எனக்குள் இருந்த திறமை வெளிப்படாமல் வீணாகிப் போயிருக்கும். பலரும் முகநூல் பாதிப்பை மட்டுமே தரும் என்று கருதுகின்றனர். ஆனால் எனக்கு ஒரு எதிர்காலத்தை தந்தது என்றால் அது முகநூல் தான். அத்துடன், என்னால் முடியாது என நினைத்தவற்றை முடியும் என்று தன்னம்பிக்கையை விதைக்கும் சிறந்த நண்பர்களையும் இந்த முகநூல் தந்துள்ளது.

6. உங்கள் கனவு என்ன ?

.பதில்: சில காலங்களுக்கு முன்வரை எந்த கனவுகளும் இல்லாமல் தான் இருந்தேன். ஆயினும், மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள் தம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு சாதித்துவிட்டு மரணித்து போவதை, முக்கியமாக என்னைப்போல் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்ட அழுத்கமை இர்பான் ஹபிஸ் படுக்கையில் இருந்து மூன்று நூல்களை எழுதிவிட்டு எழுத்தாளராக மரணித்த போது தான். “நானும் மாற்றுத்திறனாளி” என்பதை உலகிற்கு வெளிக்காட்டி என்னிடம் இருக்கும் ஊடகத்திறமை மூலம் சாதித்து மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் முன்னுதாரணமான தன் நம்பிக்கையை கொடுப்பவனாக இருந்துவிட்டு மரணித்துவிட வேண்டும் என்பதே கனவாக மாறியது அல்லது மாற்றிக்கொண்டேன். அந்தக் கனவை ஒரு போராட்டத்தில் பங்கெடுத்து செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறேன்.

7. உங்கள் ஊடக செயல்பாடுகளை தடையின்றி செய்ய ஏதாவது தடைகள் உள்ளனவா?

.பதில்: தடை இருப்பதாக நான் உணரவில்லை. ஆயினும், ஊடகவியலாளர் என்ற உத்தியோகபூர்வ அந்தஸ்த்து எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக, நான் இதுவரை விண்ணப்பிக்கவும் இல்லை. அந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டால் எனது ஊடகத்துறை பயணத்திற்கு வலுக்கிடைக்கும்.

8. எப்போதாவது உங்களது உடல் அங்கவீனம் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?

.பதில்: ஆம்!. மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறேன் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அத்தகைய கவலை எப்போதும் என் மனதோரத்தில் இருக்கும். சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும்.

9. இன்று சமூகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக பல சாதனைகளை முன்னெடுத்து வருகிறீர்கள் உங்களைப் போன்றவர்கள் மேலும் என்னென்ன துறைகளில் சாதிக்கலாம் முன்னேறலாம் ?

.பதில்: என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமக்குள் இருக்கும் திறமைகளின் அடிப்படையில் எத்துறையிலும் சாதிக்க முடியும். எனவே, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு ஏதோவொரு வழியில் அவற்றில் சாதித்து முன்னேற வேண்டும். என்னைப் போல் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட தம் பிள்ளைகளை கேள்விப்படும் வைத்தியர்களிடம் எல்லாம் கொண்டுதிரிந்து அல்லல்ப்பட்டு பிள்ளைகளையும் கஸ்டப்படுத்தாமல் அவர்களது திறமையை வளர்க்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

10. உங்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் துறை எது ?

.பதில்: இப்போது வருமானத்தை பெற்றுத்தருவது ஊடகத்துறை தான். இணைய ஊடகங்களில் செய்தி ஆசிரியராகவும், செய்தியாளராகவும் பணிபுரிகின்றேன். இந்நிலையை அடைவதற்கு முந்தைய காலத்தில் கதிரை பின்னுவது, நீத்துப்பெட்டி பின்னல் மற்றும் புகைப்பட வடிவமைப்பு செய்வது மூலமும் வருமானத்தை பெற்றுள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

11. நீங்கள் முழு நேர ஊடகவியலாளர் மட்டுமா அல்லது ஏனைய படைப்புகளில் ஆர்வம் உண்டா ?

.முழுநேர ஊடகவியலாளர் என்று தான் சொல்ல வேண்டும். புகைப்பட வடிவமைப்பு துறையில் ஆர்வம் இருந்தாலும் எனது உடல் நிலைக்கு ஏற்ப முழு நேரத்தையும் ஊடகத் துறையில் செலவிடுவதே எனக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

12. பொதுவாக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

.பதில் : சமூகம் என்ற கட்டமைப்பின் கீழ் வாழுகின்ற மக்களிடையில் ஒற்றுமை, மனித நேயம் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால், அனைத்தும் நவீனமயமாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவை அருகியிருப்பதையே காண்கின்றோம். சாமானிய மக்களின் பிரச்சினைகள், வறுமைகளை போக்குவதற்கு கரம்கொடுப்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் பல்வேறு துண்பகரமான பிரச்சினைகளுக்காக அரசிடம் கோரிக்கை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள், பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதுபோன்ற, பிரச்சினைகளை தீர்க்க பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒற்றுமை மனப்பாங்கு அனைத்து மக்களிடமும் ஏற்பட வேண்டும்மென்று பணிவுடன் வலியுறுத்த விரும்புகின்றேன். மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஏன் இதற்கு முக்கியம் கொடுக்கிறீர்கள் என்று உங்களிடம் கேள்வி எழுமென்று நினைக்கின்றேன். எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கும் என்னை மாற்றுத்திறனாளியாக பொது வெளியில் அடையாளப்படுத்தவும் மக்களின் பிரச்சினை (முக்கியமாக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை) எனக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதுதான் அதற்கான விடை.

முகநூலில் உடனுக்குடன் செய்திகளை பகிர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் காலமானார்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!