எமது இணையத்தளமான கலைஞ்சர்களின் திறமைகளை ஊக்குவிக்க நாம் அவர்களை நேர்காணல் செய்வதுண்டு.
அந்த வகையில் முன்னாள் சூரியன் ,வர்ணம் தற்போது தமிழ் FM அறிவிப்பாளர் ராமசாமி ரமேஷ் எமது இணையத்தளத்திற்கான வழங்கிய சிறப்பு பேட்டி
1. அறிவிப்பு துறையில் நீங்கள் பாடசாலை நாட்களில் கால் பதித்தீர்களா?
பாடசாலை நாட்களில் அறிவிப்புச் சார்ந்து இயங்கவில்லை. மொழித்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன். அதாவது, பாடுவது, இலக்கியப் போட்டிகளில் சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் இயற்றி நண்பர்களோடு சேர்ந்து நடிப்பது, வில்லுப்பாட்டு இப்படியான கலைத்துறை சார்ந்த பயணம் அதிகம். அப்போது அறிவிப்பாளராக என்னை எண்ணிப்பார்த்ததில்லை. விதி இப்பிடிக் கொண்டுவந்து விட்டுவிட்டது.
2 . உங்கள் முதலாவது FM வானொலி வாய்ப்பு எப்படி கிடைத்தது.
என் சொந்தவூரில் தற்செயலாக ஒரு அறிவித்தல் பலகையில் கிடந்த இணைய வானொலி அறிவிப்பாளர் தேவை என்று. அதில் ஜாலியாக கலந்து கொண்டேன். முதலாவதாக நேர்முகத் தேர்வுக்கு சென்றதும் நான் தான். முதலாவதாக தெரிவாகியதும் நான்தான். அங்கு தான் ஆரம்பம். அதன் பிறகு, இலங்கை இதழியல் ஊடகக் கல்லூரியில் முறைப்படி கற்று, சூரியன் வந்து சேர்ந்தேன்.
3 . இரவு நேர நிகழ்ச்சிகளில் உங்கள் மானசீக குரு யார்? அவரிடம் இருந்து கற்றவை?
இரவு நேர நிகழ்ச்சியில் குரு என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாரையும் பார்த்து அவர்களாக வாழ்ந்தது அல்லது வாழ விரும்பியதும் கிடையாது. என் சுயம் எப்போதும் தொலையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இனியும் இருப்பேன். இருந்தாலும், ஒரு சில அறிவிப்பாளர்களின் குரல்வளம், தொழில்முறை பழக்கவழக்கங்கள், முயற்சி, ஒலிபரப்பு நுணுக்கங்களை இரசித்திருக்கிறேன். அத்தோடு என் துரோணர் ஒருவர் என்றைக்குமே இருப்பார். தூரமாய் இருந்து அவதானிப்பார். இரசிப்பார். அவருக்கும் எனக்குமான அன்பின் அடையாளத்தை, மரியாதையை எப்போதும் வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.
4.ஒரு வானொலியின் பணிப்பாளருடன் நெருக்கமான நீங்கள் அவரின் நம்பிக்கையும் பெற்று அவரிடம் இருந்து விலகி வேறு ஒரு வானொலிக்கு போவதென்றால் வேறு யாரோ ஒருவரின் இடையூறு இருந்தது உண்மையா?
இதற்கு வெளிப்படையாக பதில் சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனாலும், இப்பொழுது இன்னுமொரு ஊடகத்தில் இணைந்தாயிற்று. அதனால் கொஞ்சம் அவதானித்துப் பேச வேண்டியிருக்கிறது. பணிப்பாளரோடு நெருக்கம், அவரின் அன்புக்குப் பாத்திரமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள்… இப்படி பல அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் இருந்தாலும், சிக்கல் என்று வரும்போது இதில் எதுவும் உதவப்போவதில்லை. அத்தோடு, பொறுப்பதிகாரி நிதானமாக நடந்துகொண்டிருந்தாலும், கீழே அடுத்தவர்களை பழிவாங்கி, பொறாமைப்பட்டு, எளிய வேலைகளைச் செய்யவென்றே இருக்கையைச் சூடாக்கும் சிலர் இருப்பார்கள். அப்படி இருக்கும் இரக்கமற்ற ஜந்துக்கள் தான் எல்லா இடங்களிலும் பிரச்சினை உண்டாக்குகின்றவர்கள். இவர்களால் தான் பல இடங்களில் சிக்கல்களும் குழப்பங்களும். அப்படி சில துரோகங்களும் துரோகிகளும் இங்கும் வந்தார்கள். இதில் ஒரு சிலருக்கு, காலம் விரைந்து பதில் கொடுத்துவிட்டது. இன்னுமொருவன் விரைவில் அதே நிலையில் வெளியேறுவான். காத்திருங்கள்.
5.புதிய அலைவரிசையில் உங்கள் நிகழ்ச்சி நேரம் என்ன?
ஹா ஹா… அது உங்கள் அனைவரினதும் அபிமானத்தை வென்ற நேரம் தான். சில நாட்களில் அறிவிக்கிறோம். அதுவரை நோ க்ளூ..!!
6.உங்கள் குடும்ப படங்கள் முகப்புத்தகத்தில் அதிக லைக்ஸ் வாங்குவது எப்படி?
எப்போதுமே சென்ட்டிமென்ட் விடயங்கள் அதிகம் இரசிக்கப்படும். அப்படியொன்று தான் இதுவும். என்னைத் தனியாளாய் பார்த்துப் பழகியவர்கள், இப்போது மனைவியோடு சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அதிகம் லைக்குகிறார்கள். அவ்வளவுதான். நண்பர்களின் அன்பாக இந்த லைக்குகளை பார்த்துக்கொண்டு கடந்து விடுகிறோம்.
7.ஊடக வாழ்வில் மிகவும் கசப்பானா அனுபவத்தை தந்த சந்தர்ப்பம் உண்டா?
ஒன்றிரண்டல்ல, ஏராளமுண்டு. கெட்ட வார்த்தைகளால் திட்டி, தட்டிக் கேட்டால் சீனியர்கள் அப்படித்தான் என்று தன்னிலை விளக்கம் தந்தவர்கள் தொடக்கம், யாரும் நம்மை பாராட்டினால் அவர்கள் முன்னிலையிலேயே நம் இயலாமையை – ஏழ்மையை கிண்டலடித்து கலங்க வைத்தவர்கள் ஈராக, கண்ட கண்ட கட்டுக்கதைகளை இட்டுக் கட்டி பழிவாங்கத் துடித்த பலர் வரை எத்தனையோ கசப்பான அனுபவங்களுண்டு. அதிலும், யாரும் தங்களை மிஞ்சி வந்துவிடக் கூடாது என்று கங்கணங் கட்டிக்கொண்டு அலையும் எட்டப்பன்களிடம் எல்லாம் தப்பிப் பிழைத்து, மேலே வருவது குதிரைக்கொம்பு. இருந்தும், முட்டி மோதி வெளிக்கிளம்பியிருக்கிறோம். அது போதும் இப்போதைக்கு.
8.உங்கள் வாரிசையும் இந்தத் துறையில், களமிறக்குவீர்களா?
அது தெரியவில்லை. இன்னும் கொஞ்சக் காலத்தில் இந்த ஊடகத்துறை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. அப்போது நம் சந்ததி எப்படி முடிவெடுக்கமென்றும் புரியவில்லை. என்னை என் பெற்றோர் விரும்பிய துறைக்குள் நுழைய அனுமதித்தது போல, நானும் என் வாரிசின் விருப்பத்தின் பேரில் விட்டுவிடுவேன். இந்த வாழ்க்கையும் அவர்களது தெரிவும் அவர்களிடமே