சுற்றுலாத் துறையானது தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும்; பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026 ஒக்டோபர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் (SLITHM) இடம்பெற்ற ஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமைத்துவக் கௌரவப் பட்டப்படிப்புத் திட்டத்தின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இப்பட்டப்படிப்புத் திட்டத்தின் முதலாவது அணியில் 65 மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இப்பட்டப்படிப்புத் திட்டத்தின் ஆரம்பம் SLITHM நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க மைல்கல் என்றும், முன்னர் தொழிற்கல்விசார் சிறப்பு மையமாக இருந்த அந்நிறுவனம், இலங்கையின் உயர்கல்விக்கும் தொழில்சார் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகப் பரிணமித்துள்ளதை இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறை என்பது வெறும் பொருளாதார நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அது கலாசாரங்களுக்கு இடையிலான பாலமாகவும், சர்வதேசத் தொடர்புகளுக்கான தளமாகவும், ஆயிரக்கணக்கான இலங்கைக் குடும்பங்களுக்கான வாய்ப்புகளின் ஊற்றாகவும் விளங்குகிறது என்றார். இலங்கை கட்டியெழுப்ப விரும்பும் சுற்றுலாத் துறையானது தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்; இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும்; பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்; பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலட்சிய இலக்குகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இவ்வெதிர்பார்ப்புகளை அடைவதற்கு உட்கட்டமைப்பு மேம்பாடும் முதலீடுகளும் மட்டுமன்றி, மேலும் பல விடயங்களும் தேவைப்படும் என வலியுறுத்தினார். இத்துறையில் நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு உயர் திறன் கொண்ட பணியாளர் படை, வலுவான நிறுவனங்கள், புதுமையான சிந்தனை, சிறப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இன்றியமையாதவை என்றும் அவர் கூறினார்.
சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பிரதமர், இத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பதற்கும் அதன் பயன்களைப் பெறுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமைத்துவக் கௌரவப் பட்டப்படிப்புத் திட்டத்தின் அறிமுகம், தொழில்சார் கல்வியை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான திறன்மிகு மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், SLITHM நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வித் துறையின் பிரதிநிதிகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்தோர், கல்விசார் பணியாளர்கள், பெற்றோர், இப்பட்டப்படிப்புத் திட்டத்தின் முதலாவது அணிக்குத் தெரிவான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2026.10.28
