நேத்ரா TV அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக சிரேஷ்ட தயாரிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஐ. ஜாபிர்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஐ. ஜாபிர் B.A. (SL), D.F. Tech.(NFC), நேத்ரா TV அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக (Assistant Director) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக ‘பிரவாகம்’, ‘ ‘சிம்ஃபனி’, ‘நான்காவது பரிமாணம்’, ‘புன்னகை’, ‘கோடைமழை’ போன்ற புகழ்பெற்ற கலை, இலக்கிய, சமூகவியல், இசை, சினெமா சார்ந்த தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கி நெறியாள்கை செய்துள்ள இவர், தொலைக்காட்சி நாடகங்கள், விவரணங்கள் போன்றவற்றையும் எழுதி இயக்கியுள்ளார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முதலாக தேசிய விருது பெற்ற தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இவராகும். முதன்முறையாக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தொலைக்காட்சி விருது விழாவில் சிங்கள மொழி தயாரிப்புக்களுடன் போட்டியிட்ட இவரது மூன்று படைப்புக்கள் விருதுகளைப் பெற்றன.

கிழக்கு மாகாணத்தின் முதலாவது குறும்படம் ‘இறக்கை’,

இலங்கையிலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்ற ‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’ ஆவணப்படம், சுதந்திர இலக்கிய விழா விருது பெற்ற ‘மிக அதிகாலை நீல இருள்’ (கவிதை நூல்), ஆதாரம்: தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே உறவை மீள்நிர்மாணிப்பதற்கான ஆவணம் (கட்டுரை நூல்), ‘நம்பிக்கையின் வாக்குமூலம்’ பாடல் இறுவட்டு ஆகியன இவரது ஏனைய ஆக்கங்களாகும்.

1990 முதல் சுயாதீன மாற்று பத்திரிகையாளராக செயற்பட்ட இவர் இரு ஆண்டுகள் ‘வீரகேசரி’ வாரவெளியீட்டின் நவீன இலக்கிய, ஊடக, சினெமா பக்கங்களின் பொறுப்பாசிரியராகவும் ‘எனவே இனி’, ‘நிராயுதம்’ ஆகிய அச்சு இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ‘சிறகுநுனி’ பதிப்பகம் – தயாரிப்பு இல்லம் மூலம் பலரது நூல்கள், குறும்படங்கள், திரைப்படம் போன்றவற்றை வெளியீடு செய்துள்ளார். 2018 முதல் கல்லடி சாந்தி சினெமாவில் ‘சிறகுநுனி மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழாவை ஆரம்பித்து ஆண்டு தோறும் நடாத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் பல்வேறு இலக்கிய, ஊடக, திரைப்பட, ஆவண கருத்தரங்குகளில் பங்கேற்ற அனுபவத்தோடு இலங்கை ஊடக/தொலைக்காட்சி பயிற்சி நிறுவகத்தின் கற்கைநெறி பணிப்பாளராகவும் வளவாளராகவும் பல வருடங்கள் இயங்கியவர்.

இவரிடம் கற்ற, உதவியாளராகப் பணியாற்றிய தமிழ், முஸ்லிம் இளைய தலைமுறையினர் பலர் இன்று பல்வேறு துறைகளில் உச்சநிலை பெற்றுத் திகழ்கின்றனர்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆத்மா ஜாபிர் எனும் புனைபெயரில் அறியப்படும் எம்.ஐ. ஜாபிரின் பணிகளை விதந்து, கிழக்கு மாகாண சபை கடந்த 2023இல் ‘பல்துறை வித்தகர்’ விருது வழங்கி கௌரவித்தது.

அல்ஹாஜ் எம்.ஐ. ஜாபிர் அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!