‘நின்னுக்கோரி’ நிலாமதி விடைபெற்றார் .கலைவாழ்வில் நாம் தினமும் பலரைச்சந்தித்து வருகிறோம். சிலருடன் நட்புக்கொள்கிறோம். ஒருமுறை ஏற்படும் சந்திப்பு, நட்பு என்பன எமது வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத நினைவுகளாகிவிடுவதும் உண்டு.
எனது கலைவாழ்க்கையில் பாடகி, சகோதரி நிலாமதி மறக்க இயலாத நினைவுகளாகிவிட்டார். பிரான்ஸ் நாட்டில் 1989ம் ஆண்டு இலங்கைக்கலையகம் மூலமாக நடத்திய கலையமுதம் நிகழ்ச்சிக்கு இலங்கையில் இருந்து ஒரு கலைக்குழுவை வரவழைக்கத் திட்டமிடப்பட்டது.
சகோதரர், அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களே தாயகப் பணிகளை எல்லாம் மேற்கொண்டார்.
ஒரு காணொளி நாடா பதிவொன்றை அனுப்பி வைத்திருந்தார். ஆவலுடன் பார்த்தேன், இல்லை பார்த்தோம். நான், மனைவி, ஒருவயது மகன், ரஜெந்தன். அந்தக் காணொளி நாடாவில் ‘நின்னுக்கோரி’ பாடல் பதிவாகியிருந்தது. நிலாமதி பாடியிருந்தார். மோகன்- ரங்கன் இசை மீட்டியிருந்தனர்.
நன்றாகப்பாடியிருக்கிறார், மேடைக்கேற்ற கலைஞர் என்ற எனது விருப்பத்துடன் இலங்கைக்கலைக்குழுவில் நிலாமதி இடம்பிடித்தார்.
எமது இல்லத்தில் அந்த காணொளி நாடா எத்தனை ஆயிரம் தடவைகள் பார்க்கப்பட்டது என்பது கணக்கிட முடியாது. எந்த நேரமும் நின்னுக்கோரி பாடல் வீட்டில் கேட்கும், நிலாமதியின் முகம் தொலைக்காட்சியில் தெரியும். இது யாருக்காக என்று நினைக்கிறீர்கள்? இதுவரையான உங்கள் கற்பனை தவறானது.
நின்னுக்கோரி பாடலால் கவரப்பட்டவர் அன்று ஒரு வயதாக இருந்த ரஜெந்தன். அவர் உணவருந்துவதற்கு நிலாமதி பாடவேண்டும். நித்திரை கொள்வதற்கும் நின்னுக்கோரி ஒலிக்க வேண்டும். காட்சியும் இருக்க வேண்டும்.
வேறு எதுவுமே அவர் அந்நாட்களில் தேடியதில்லை. இந்தப்பாடலுடன் நிலாமதி எங்கள் இல்லத்துத் தொலைக்காட்சியில் எப்பொழுதும் தோன்றுவார். நிலாமதி பரிஸ் நகருக்கு வந்து எனது இல்லத்துக்கு வருகை தந்த பொழுது இந்த விடயத்தை அவருக்குக் கூறினோம்.
“அடேயப்பா எனக்கு இந்த வயதில் இப்படி ஒரு ரசிகனா” என்று கூறி வாஞ்சையுடன் குழந்தை ரஜெந்தனை முத்தமிட்டார். நிகழ்ச்சி நடைபெறும் பொழுது மேடையில் நிலாமதி நின்னுக்கோரி பாடலைப் பாடினார்.
குழந்தை ரஜெந்தன் குதூகலித்தார். அதனை மேடையில் இருந்து பார்த்து மகிழ்ந்தார் நிலாமதி. தொலைபேசி வழியாக உரையாடும் வேளைகளில் எல்லாம் “என்ர ரசிகன் எப்படி இருக்கிறார்” என, நிலாமதி கேட்டிடத் தவறுவதில்லை. மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன.
ஒளிப்பதிவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, கனடாவிலிருந்து நண்பர் பாபு ஜெயகாந்தன் வட்சப் வழியாக இந்த துயரச்செய்தியை அறியத்தந்தார்.
வேலை இடை நிறுத்தப்பட்டு தனது அபிமானப் பாடகியின் நிழல்படங்கள் பலவற்றைத் தேடி எடுத்துத்தந்தார். அவற்றை இங்கு பதிவிட்டுள்ளேன். ‘நின்னுக்கோரி’ நிலாமதி நித்தம் எம் நெஞ்சில் குடியிருப்பார்.
திரு ராஜெனின் முகப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்ட பதிவு