”நமது தலைமுறை ஊடகவியலாளர்களுள் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களை கொண்டாடவேண்டிய தருணம் இது” – தர்ஷி கிருபா மனம் திறக்கிறார்.

வானொலி ,தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான தர்ஷி கிருபா இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகமான lankatalkies.lk க்கு வழங்கிய பதிலகள்


கேள்வி : இந்திய ஊடக நிறுவனங்களின் பணியாற்றிய நீங்கள் நிறைய தொலைக்காட்சி அனுபவங்களை பெற்று இருப்பீர்கள்.ஆனால் அதை எவ்வாறு இலங்கை ஊடகங்கள் உங்களிடம் இருந்து பெறப்போகிறது?


பதில் : ஒரு சின்ன திருத்தம். நான் இலங்கை ஊடகவியலாளர் என்பதனால்தான் இந்திய ஊடங்களில் ஒரு தனி இடம் கிடைத்தது. பொதுவாக இலங்கைக்கும், இலங்கை தமிழுக்கும் இந்தியாவில் மட்டும் அல்ல. எங்கு போனாலும் ஒரு மதிப்பு உண்டு. அந்த மதிப்பு எனக்கும் கிடைத்தது. நம் நாட்டின் பெருமையாக நாங்கள் நினைக்கும் திரு அப்துல் ஹமீட் அவர்கள் பணி புரிந்த ராஜ் டீவியிலும் தொகுப்பாளினியாக பணிபுரிய கிடைத்தது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் “நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் யாழ் தமிழை பேசிக்காட்டச்சொல்லி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இலங்கை ஊடகம் எனது அடையாளம், இந்திய ஊடகம் எனது அனுபவம்.


கேள்வி : வானொலி ,தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களிலும் சாதித்த நீங்கள் மதிக்கும் இலங்கை ஊடக பிரபலம் யார்?


பதில் : இதுவரை சாதித்த நிறைய மூத்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்கள் ஒருவகையில் நமக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள். அதேவேளை நமது தலைமுறை ஊடகவியலாளர்களுள் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களை கொண்டாடவேண்டிய தருணம் இது. சகல ஊடகங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். பெயர் குறிப்பிட முடியாத அளவிற்கு.


கேள்வி : சக்தி ,வர்ணம் ,கேபிடல் இந்த மூன்று ஊடக நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் உள்ளூர் படைப்பாளிகளை கையாளும் விதம் தொடர்பாக உங்கள் கருத்து?


பதில் : வர்ணத்தின் ஆரம்பம் வெற்றி. என்னுடைய ஆரம்பமும் வெற்றி. வர்ணத்தில் ஆரம்பம் முதலே உள்ளூர் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் இருந்தன. வர்ணத்தின் தலைமைத்துவம் எப்பொழுதுமே இலங்கையின் இளம் தலைமுறைக்கு கரம் கொடுக்கும் தலைமைத்துவமாக இருந்துவருகிறது. அதன் நிலைய குறியிசைகள்கூட உள்ளூர் கலைஞர்களின் இசையிலும், குரலிலும் உருவானவைதான். சக்தியை பொறுத்தவரையில் அது ஒரு ஊடக கடல். அதில் சகல கலையம்சங்களும் நிறைந்திருக்கும். மக்கள் சக்தி என்ற வாசகத்திற்கேற்ப அது எப்பொழுதும் மக்களுக்காக இயங்கும் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். கெப்பிடலை பற்றி சொல்வதற்கு இப்போதைக்கு ஒன்றும் இல்லை. அவர்கள் வளர்வதற்க்கே சில காலம் தேவை.


கேள்வி : விஜய் TV யின்
‘ரெட்டை வால் குருவி’ நாடகத்தில் நடித்து இலங்கை மக்களுக்கு பெருமை சேர்த்த நீங்கள் நமது நாட்டு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? FM என்ற பெயரில் தினமும் உருவாகும் இணையத்தள வானொலிகளுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது ?


பதில் : விஜய் தொலைக்காட்சியின் ‘ரெட்டை வால் குருவி’ நாடகத்தில் நடித்ததற்கு காரணம் அதிலும் நான் ஒரு அறிவிப்பாளராக தோன்றுவதாக சொல்லப்பட்டதுதான். எனது வாழ்வியலுக்கு ஏற்ற பாத்திரங்கள் அமைந்தால், கதை நன்றாக இருந்தால் முயற்சிக்கலாம்.


கேள்வி : உங்கள் திறமைக்கு இலங்கையில் சரியான இடம் கிடைக்கவில்லை என்று என்றாவது ஒரு நாள் நீங்கள் நினைத்தது உண்டா?


பதில் : இதற்குரிய பதிலை முதல் கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் சகோ


கேள்வி : சக்தி தொலைக்காட்சியில் நீங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுவதற்கான காரணம்?


பதில் : அப்படியா? இன்னும் பேசப்படுகிறதா? ஹா ஹா அது உண்மையாக இருந்தால் சந்தோசம்.




கேள்வி : FM என்ற பெயரில் தினமும் உருவாகும் இணையத்தள வானொலிகளுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது ?



பதில் : ஒரு வானொலி உருவாக்கப்பட்டு, அந்த வானொலி ஒரு சராசரி மனிதனை சந்தோஷப்படுத்துமாயின், அது அந்த வானொலியின் வெற்றியாகும். ஆனால் வானொலி என்பதும் ஒரு கலை, அதனை உணர்ந்து செயற்பட்டால் அந்த வானொலி மக்கள் மனதில் இடம்பெறும், அதன் மரியாதை நிலைத்து நிற்கும். அதே நேரம் இணைய வானொலிகளுக்கு FM என்று சொல்வதும் தவறு. FM என்பது பண்பலை, அதை உணர்ந்து பெயர்களை வைப்பதும் நல்லது.

இலங்கை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நீங்கள் முன்னெடுக்கும் பணிக்கு வாழ்த்துக்கள்.

இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகமான lankatalkies.lk க்கு வானொலி ,தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான தர்ஷி கிருபா
வழங்கிய பதிலகளுக்கு அவருக்கு எமது நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!