பிரியனின் வரிகளில் அங்குஷனின் இசை மற்றும் குரலில் உருவான “ஆண்வானம்” என்கிற பாடல் அண்மையில் வெளியாகி யு-ரியூப்பில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி நடை போடுகின்றது.
இந்தப் பாடலில் அங்குசனுடன் இணைந்து சகோதர மொழி நடிகை ஹிருஷி வசந்துரா நடித்துள்ளார். ஏற்கனவே, “செவ்வந்தி” பாடல் மூலம் தமிழில் அறிமுகமாகிய ஹிருஷிக்கு இது இரண்டாவது பாடல்.
காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா. ட்ரோன் காட்சிகள், பரபர சேசிங் காட்சிகள் என தன் பங்கிற்கு அசத்தியுள்ளார். படத்தொகுப்பு மற்றும் வர்ணம் டிரோஷன் அழகரட்னம். டிசைன் ரஜீவன். பாடலை இயக்கியுள்ளார் அபயன் கணேஷ்.
சிங்கள நடிகையை நடிக்க வைத்ததாலோ என்னவோ, வழமையான சிங்களப் பாடலைப் போல பாடலின் இறுதியில் நாயகியை இல்லாமல் செய்து விட்டார்கள். ஆனாலும் வரிகளுக்கு ஏற்ப திகட்டத்திகட்ட காதலை காட்சியூடாக தந்து சென்றிருக்கின்றார்கள்.
இந்தப் பாடலுக்கு இரட்டைப்பாதை நளசேகர் என்பவர் எழுதிய விமர்சனத்தை இசையமைப்பாளர் அங்குஷன் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அதனை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.
புதுமையான ஒரு பெயரோடு இந்த இசை மேகம் பொழிந்திருக்கின்றது. இளைய இதயங்களை கொள்ளை கொண்டிருக்கின்றது. முழுமையான ஒரு இசை வடிவமாக, கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளோடு இந்த இசையை நாம் ரசிக்கலாம்.
பாடல் வரிகளை எடுத்துக்கொண்டால் காலத்துக்கேற்ற வரிகள், காதலின் வலிகள், உணர்ச்சிகள் என்று பல கோணத்தில் இந்த கவி வரிகளை நாம் பிரித்துப் பார்க்கலாம். அருமையான கவித்துவம். இளைய உள்ளங்களை இந்தப் பாடல் நிச்சயம் கொள்ளை கொள்ளும் .
இசையை எடுத்துக்கொண்டால், இசை கோர்ப்பில் அவர் செய்திருக்கும் விந்தைகள் நிறயவே உண்டு. பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் அடுத்து வரும் வரிகளோடு நமது இதயத்தையும் வருடிச் செல்கின்றது. மெல்லிசை, கர்நாடக இசை, மேற்கத்தைய இசை என்று ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்திக் காட்டி இருக்கின்றார். இசைக்கலவை அதி உச்சம். பாடலுக்கு தன் குரலையே தனமாக வழங்கி பாடி இருக்கின்றார், மெருகேற்றி இருக்கின்றார், வெற்றியும் கண்டிருக்கிறார் .
அடுத்ததாக நாம் காண்பது இந்த இளஞ் ஜோடிகளின் காதல் கவிதை. காதல் என்பதே கவிதை தானே. நாயகியாக வரும் ஹிருஷி வசுந்தரா கதைக்கேற்ற நல்ல நல்ல தெரிவு. அருமையான கதா நாயகியாக வலம் வருகின்றார்,இவர்களின் நடிப்பு, முக பாவங்கள், நவரசங்களையும் கொண்டு வரும் நாயகியின் முக பாவனை, காதல் அச்சம், பெருமிதம் கெஞ்சல், கொஞ்சல் என்று மனதை கொள்ளையடித்து, மென்மையாக வெள்ளையடித்துச் செல்கின்றார். தனது நடிப்பால் மாயம் செய்த தோகை , இறுதியாக காற்றில் கரைந்து போகும் கர்ப்பூரமாக கலைந்து போகும் போது மனதில் காயம் செய்து போகின்றார்,
இயக்குனர் திறமை அபாரம். எளிமையான கதை தேர்வு , இசைகேற்றபோல காட்சியமைப்பு, பயணத்தில் ஒரு கதை, இறுதியில் சமூக விழிப்புணர்வு . ஓர் சமூக பொறுப்புள்ள இயக்குனராக மக்களுள் நின்று கொள்கிறார். வாழ்த்துக்கள் இயக்குனரே.
படப்பிடிப்பாளர் மிக அற்புதமாக காட்சிகளை அமைத்துள்ளார். வாகன ஓட்டம் அருமை, சினிமாபட பாணியில் அதை அமைத்திருக்கிறார். நெறியாள்கை ஒளி , ஒளிக் கலவை அனைத்தும் ஒரு திறமையான படைப்புடன் இந்த ஆண் வானத்தை படைத்திருக்கிறது. பாடலின் தொகுப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும். பாடலின் போக்கிற்கு அமைவாக சிறந்தமுறையில் தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். முதலில் இந்த ஆண் வானம் என்ற தலையங்கம் மிக மிக வித்தியாசமான ஒன்றாக நான் காண்கின்றேன். அதே போல் வானம் இடி, மின்னல், மழை என்று எல்லாவற்றையும் தன்னுள் தேக்கி வைத்திருப்பது போல, காதல் வீரம் சோகம் கண்ணீர் விரகம், வேதனை, விவேகம் என்று பலவற்றை இந்த காதல் நாயகன் தன்னுள் தேக்கி வைத்து இருப்பது அருமை!
இருப்பினும் , ஆங்காங்கே பாடல் காட்சிகளில் சில இடங்களை இன்னும் மெருகூட்டியிருக்கலாமோ ,இன்னும் சரியாக திட்டமிட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றியது. இருப்பினும் அவர்களுடய கால அளவு குறுக்கம், உபகரணங்கள் பற்றாமை போன்றன காரணமாக இருக்கலாம் என்று நம்புகின்றேன். எவ்வாறிருப்பினும் எமது புதல்வர்கள் எமது மண்ணில் பாடல் காணொளியினை இவ்வளவு தரமாக செய்திருக்கிறார்கள் என்பது என்னை வெகுவியப்பில் ஆழ்த்தியுள்ளதே உண்மை. அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.