கொண்டாடப்பட வேண்டிய யாழ் போதனா மருத்துவமனை பிளாஸ்டிக் சத்திர சிகிற்சை மருத்துவர் இளஞ்செழிய பல்லவர் முல்லைத்தீவின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கற்று தனது கடின உழைப்பினால் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவத்தினைக் கற்றவர்.
முல்லைத்தீவில் போர் உக்கிரமான வேளையில் வைத்தியர்கள் பலர் யாழைவிட்டும் நம்நாட்டைவிட்டும் வெளியேறிக்கொண்டிருந்த வேளையில் முல்லைத்தீவுக்கு கேட்டு இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்.
போர் காலத்தில் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய இவர் அக்காலத்தில் எரிகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் போர் முடிந்தும் எரிகாயத்தால் கைகள் குறண்டிய நிலையிலும் முகங்கள் தோல்கள் சுருங்கிய நிலையிலும் அங்கு சிரமப்பட்டு வருவதை அவதானித்து அவர்களுக்கு பிளாஸ்டிக் சிகிற்சையின் மூலம் பழையபடி அவர்களை வாழவைக்கலாமென்ற நோக்கில் பிளாஸ்டிக் சத்திர சிகிற்சையினை கற்று மீண்டும் யாழில் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.
போர்காலத்தில் எரிகாயங்களுடன் வந்து தன்னிடம் சிகிற்சை பெற்றவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு பிளாஸ்டிக் சிகிற்சை அளித்து அவர்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்தவர்.
(போர் காரணமான எரிகாயத்தால் கைகள் குறண்டிய நிலையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரை தனது பிளாஸ்டிக் சத்திர மூலம் பழையவாறு ஆக்கியவர்) அமெரிக்கா உள்ளிட்ட மேற்கைத்தைய நாடுகளிலில் இருந்த பல பிரபல்யமான மருத்துவமனைகளில் கிடைத்த வேலைவாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு தொடர்ந்தும் யாழ்ப்பாண மருத்துவ மனையிலேயே பணியாற்றுபவர்.
2019 ஆகஸ்ட் மாதம் வரை யாழ்ப்பாண மருத்துவமனையில் இவருடைய துறைக்கு என்று வாட்டு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்காமல் இவருடைய நோயாளிகளை எல்லா வாட்டுகளிலும் வைத்திருந்ததால் நாள் தோறும் காலை 7 மணிக்கு வாட்டு பார்க்கத் தொடங்கி 11/12 மணிவரை எல்லா வாட்டுகளுக்கும் நடந்து நடந்து தனது நோயாளிகளைப் பார்வையிட்டவர்.
அதற்கு பிறகே சத்திர சிகிற்சையினை மேற்கொள்ளுவார். அண்மையில் கிளிநொச்சியில் துண்டாடப்பட்ட கையை எட்டு மணித்தியால சத்திரசிகிச்சை மூலம் பொருத்திய பெருமை இவரை சாரும் அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் (ஜூன்30) கோண்டாவிலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் துண்டாடப்பட்ட கையையும் பொருத்தி வெற்றி கண்டவர்.
இவர் யாழில் பிறக்காததாலோ என்னவோ யாழ் போதனா மருத்துவமனையில் இவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்புக்கள்/பகுபாடுகள் ஏராளம். அதன் உச்சக்கட்டமாக எந்தவித முன்னறிவித்தலோ கோரிக்கையோ இன்றி கொழும்புக்கு இடம்மாறம் வழங்கப்பட்டாலும் போராடி மீண்டும் யாழ் மருத்துவமனைக்கே பணியாற்றத் திரும்பியவர்.
* பல முன்னணி வைத்தியர்களால் 14 வருடங்களாக முயன்றும் சுகமாக்க முடியாது என கைவிடப்பட்ட எனது தாயரின் நோயினை குணமாக்கியவர். இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த மருத்துவர் கோபி சங்கர் அவர்களையும் இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். கொண்டாட வேண்டிய மருத்துவர். தமிழ்ச் சமூகத்தின் சொத்து!