13 வருட வனவாசம் ஒருவாறு முடிவுக்கு வந்தது–2008 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஜூன் மாதத்தில் வெளிநாடு செல்லும் நோக்குடன் கொழும்புக்குச் சென்றேன்.
அந்த முயற்சி நிராகரிக்கப்படவே ஹோட்டல் மெனேஜ்மெண்ட் படிப்பா? ஊடகக்கல்வியா? என்ற குழப்பத்தில் இருந்தேன். (இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த துறைகள்) அந்த நேரத்தில் என்னைப்போலவே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத என் நெருங்கிய பாடசாலை நண்பர்கள் (கணிதத்துறை) பலரும் Q.S. ஐ தேர்வு செய்திருந்தார்கள்.
எனக்கோ பெருங்குழப்பம். பொறியியலாளனாக ஆசைப்பட்ட நான், படித்த துறையை விட்டு இன்னொரு துறைக்குள் நுழைய தயக்கமாகவே இருந்தது. ஈற்றில் என் விருப்பமே வென்றது (சந்தர்ப்ப சூழ்நிலைகள் பல அதற்கே சார்பாக இருந்தமை தான் முக்கியமானது).
ஊடகக் கல்வியைத் தொடர்ந்தேன்.. கற்கை முடிந்த உடனேயே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்திப்பிரிவில் (தற்காலிக) வேலையும் கிடைத்தது. எதிர்பாராத விதமாகவே இரண்டாவது வருடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்க ஊடகத்துறையை விட்டு வெளிநாடு சென்றேன்.
அங்கு ஊடகத்துறையில் வேலைசெய்யாவிட்டாலும் அப்பொழுது வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்ததால் ஊடகத்துறையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிக்கொண்டிருந்தேன். மறுபடியும் இலங்கை வரவேண்டியதாக போய்விட்டது (நானாக விரும்பி).
வந்து யாழில் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்தேன். “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது“ என்பதைப் போல அங்கிருந்தவாறே விளையாட்டு சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்தேன்.
மீண்டும் ஊடகத்துறைக்குள் நுழைந்தேன். மீண்டும் கொழும்பு வாழ்க்கை! அந்த வாழ்க்கை கடந்த 10.06.2021 உடன் முடிவுக்கு வந்தது. இதற்குள் கல்யாணம், குழந்தை என அது வேறு…என் வாழ்க்கையின் முக்கிய காலப்பகுதியை (உயர்தரத்திற்கு பிறகு) கொழும்பில் கழித்திருக்கின்றேன்.
இதனால் யாழ்ப்பாணத்தை விட கொழும்பு தான் எனக்கு மனதுக்கு நெருக்கமானது. வாழ்க்கையைக் கற்றுக்கொண்டது அங்கு தான். திருமணம் முடித்த போது கூட கொழும்பில் செட்டிலாகும் எண்ணம் இருந்தது. குழந்தை கிடைத்த பிறகு அந்த எண்ணம் சந்தேகத்திற்குரியதாகியது.
“கொரோனா” அந்த சந்தேகத்தை உறுதியாக்கியது. கொழும்பை விட்டு விடைபெற வேண்டியதாகிவிட்டது. என் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் முக்கியமான ஒரு முடிவு.
இந்த முடிவு மிகச்சரியானது என்பதை எத்தனை வருடங்கள் கழித்தானாலும் நான் உணர்வேன். அதில் மாற்றுக்கருத்தில்லை. விடைகொடு கொழும்பே…