ரவுண்டு கட்டும் ரசூல் |உலக ஊடக சுதந்திர தினம்

இன்று 03.05.2020 உலக ஊடக சுதந்திரம் தினம். இன்றைய தினத்தில் செய்தி ஊடகம் ஒன்றோடு தொடர்புடைய ஒருவரின் நேர்க்காணலை உங்களுக்கு தருவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.அந்தவகையில் இலங்கை மக்கள் அனைவரும் அறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் KM ரசூல் எமது Lankatalkies இணையதளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டி

1.உங்கள் ஊடக பயணம் எப்போது ஆரம்பமானது?

உத்தியோகபூர்வமாக 2001 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தினக்குரல் தேசிய செய்திப் பத்திரிகையின் கண்டி பிராந்திய செய்தியாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். அதன் பின்னர் நியூஸ்பெஸ்ட் – சக்தி வானொலி செய்தியாசிரியராக 2006 ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் ஊடகத்துறைக்குள் பிரவேசம் கிடைத்தது. ஆனால் கல்லூரி காலத்தில் இருந்து எனது தந்தையின் ஊடகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன், செய்திகள் மீதான ஆர்வம் ஏற்படது.

2.சக்தி செய்திப் பிரிவில் நீங்கள் பணியாற்றிய அனுபவம் பற்றி?

ஒரு தசாப்தம் கடந்த அந்த காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபம் மிகவும் இன்றியமையாதது. எனது மூத்த செய்தியாசிரியர்களான இரா. செல்வராஜா, நெவில் அன்தனி, சுஹைர் ஷெரீப் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் இயற்கையெய்திய நல்லதம்பி நெடுஞ்செழியன் இவர்களுடன் எனது சக செய்தியறை நட்பு வட்டங்கள் அனைவரிடமும், ஏதோவொரு விடயத்தைக் கற்றுக் கொள்வதற்கும், நான் அறிந்தவற்றை பகிர்ந்துகொள்வதற்கும் சிறந்த களமாக அமைந்தது. அங்கே என்னுடன் கூட பணியாற்றியவர்கள் அனைவருமே நல்ல ஒத்துழைப்புடன் பழகினார்கள். யுத்த காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் பணியாற்றியமை மறக்க முடியாத அனுபவம். மூன்று மொழிகளும் கொண்ட அலைவரிசை என்பதால் சமகாலத்தில் அனைவருடனும் பணியாற்றக் கிடைத்தமை வேறெங்கும் கிடைக்காத ஒரு உன்னத அனுபவம் என்றே கூறுவேன்.

3.நியுஸ் பஸ்டில் சுதந்திரமாக நீங்கள் செயற்பட, செய்தி அறிக்கையிட வாய்ப்பு கிடைத்ததா?

நிச்சயமாக சுதந்திரமாகவும், செய்தி அறிக்கையிடவும் வாய்ப்புகள் அங்கே கிடைத்தன. ஆனாலும் நிறுவனக் கொள்கை மற்றும் வழிகாட்டல்களுக்கும் மதிப்பளிக்கும் கடப்பாடு இருப்பதால், அந்த வரையறைகளுக்குள் செயற்படுவது அவசியமாகும். சில சந்தர்ப்பங்களில் தடைகள் இருந்தாலும், அதற்கான எனது தரப்பு தன்னிலை விளக்கம் அளிப்பதற்கும் சந்தர்ப்பம் இருந்தது. அதிலும் உயர்பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது அவரவர்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செய்தி அறிக்கையிடலில் ஏற்றம்-இறக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சுதந்திரமாக செயற்படுவதில் எந்தவித அழுத்தங்களும் இருக்கவில்லை.

4.சிரச செய்தி பிரிவினர் எவ்வாறு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்?

சிரச என்று சிங்கள மொழிமூலம் தனியாக இயங்கினாலும் செய்தியறையில் அனைவரும் ஒன்றாகவே பணியாற்றினோம். எமக்கிடையே வேறுபாடுகள் குறிப்பிடும் அளவிற்கு இருக்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசுவதற்கும், நட்புறவு பேணுவதற்கும் எந்த தடைகளும் இருந்ததில்லை. ஆனால் செய்தியறையில் சிரச – சக்தி என்ற வேறுபாடின்றி அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிக ஒத்துழைப்புடன் தான் பழகினார்கள். செய்திகளை பகிர்ந்துகொள்வதிலும், அவர்களுக்கு தேவையான தமிழ் பிராந்திய செய்திகளாயினும் சரி, எமக்குத் தேவையான சிங்கள பிராந்திய செய்திகளாயினும் சரி அவற்றிற்கான மூலங்கள் மற்றும் தகவல் சேகரிப்புகளில் இரண்டு தரப்பும் ஒத்துழைப்புடன் தான் செயற்பட்டிருக்கின்றோம். அந்தளவிற்கு எமது தலைமைத்துவம் எங்களை கட்டுக்கோப்புடனும் ஓரணியாகவும் பணியாற்றுவதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அநத வகையில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜமகேந்திரன் அவர்களுக்கும், நட்போடு அணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு ஷெவான் டேனியல் அவர்களுக்கும் எப்பொழுதும் எனது கௌரவம் உண்டு.

5.இப்படி நேர்த்தியான ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து விலகியதை பற்றி நீங்கள் எப்போதாவது மனம் வருந்தியது உண்டா ?

நிச்சயமாக. திடீரென எனது தயாருக்கு ஏற்பட்ட கைமுறிவு காரணமாக சந்தர்ப்ப சூழ்நிலையால் விலக நேரிட்டது. எனது தந்தையும் 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக சேவையாற்றி வரும் ஒரு மூத்த ஊடகவியலாளர். தாயார் குணமடையும் வரையில் அவர்கள் கூடவே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக விலகினேன். அது ஒரு எதிர்பாராத சம்பவம். நான் நியூஸ்பெஸ்டில் இருந்து விலகுவதற்கு வேறு காரணங்கள் கிடையாது.

6.கேபிடல் வானொலி பிரவேசம் எப்படி?

நியூஸ்பெஸ்டில் இருந்து விலகிய இரண்டு மாதங்களின் பின்னர் அங்கு அலைவரிசை பிரதானியாக இருந்த நண்பர் ஸியாவின் அழைப்பை ஏற்று கெப்பிட்டல் வானொலியில் இணைந்தேன். அந்த நிறுவனத் தலைவருடன் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் பின்னர் எனக்களித்த சில வாக்குறுதிகளின் அடிப்படையில் கெப்பிட்டல் வானொலியுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். நான் அங்கு காலடி வைத்தபோது புதிய வானொலியாக இருந்தாலும் பல திறமைசாலிகள் செய்திப் பிரிவிலும், சரி, நிகழ்ச்சிப் பிரிவிலும் சரி அனைத்து ஊடகங்களிலும் பணியாற்றிய மிகவும் திறமையான பலர் அங்கு ஒருமித்து மிடுக்காக பயணித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட பணிச்சூழல் மாற்றத்தினால் விலக நேரிட்டது.

7.செய்தி பிரிவில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு ஊடக நிறுவன பிரதானியால் பக்க சார்பாக செயற்பட வேண்டும் என்ற கட்டாயமாக்கப்பட்ட சட்டங்கள் உங்களை பாதித்ததா?

பொதுவாக கட்டாயமாக்கப்பட்ட சட்டங்கள் என்று ஒரு கொள்கை ஊடக நிறுவனங்களுக்கு இல்லை. ஆனால் அது ஊடக நிறுவன உரிமையாளர்களின் அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைப் பொறுத்தே அமைகின்றது. ஆனால் ஒரு அலைவரிசையை தன்னகத்தே வைத்திருப்பதால் தான் வைத்தது தான் சட்டம் என்று எவருமே உரிமை கோர முடியாது. ஏனென்றால் அந்த அலைவரிசைக்கு பொது மக்களே இறுதியில் உரிமை கோருபவர்கள். ஒவ்வொரு அலைவரிசை உரிமையாளரும் இநுதியில் தாங்கள் பொது மக்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டினைக் கொண்டிருப்பதை உணர்ந்து செயலாற்றுவது அவசியமாகும். இந்த வகையில், நான் மட்டுமல்ல பல நேர்மையான நெறிமுறை தவறாத ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

8.நீங்கள் ஒரு ஊடக நிறுவன பிரதானியால் அச்சுறுத்தப்பட்டதாக வெளியான செய்திப்பற்றி ?

அந்த சம்பவம் தொடர்பாக நான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைப் போன்றே செய்தியறை அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட பல ஊடகவியலாளர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மௌனமாக இருக்கின்றார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.

9.எதிர்வரும் காலங்களில் உங்களை பிரதான தொலைக்காட்சிகளில் பார்க்கலாம் என்று கதை அடிபடுகிறது இது உண்மையா ?

கடந்த சில மாதங்களாக எனக்கு ஊடக நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் வந்தபோதும், வெகுசன ஊடகத் தொடர்பாடல் துறையில் (Executive MSc in Mass Communications) முதுமானிக் கற்கையை பூர்த்தி செய்யும் இறுதித் தருவாயில் இருப்பதால் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நிச்சயமாக எனது திறமை மீது முழுமையான நம்பிக்கை இருக்கின்றது. எனது ஊடக மீள் பிரவேசம் குறித்து காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

10. செய்திப்பிரிவில் இணைய ஆசைப்படும் புதியவர்களுக்கு அனுபவமுள்ள நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

செய்தி என்பது மக்களுக்கானது. ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப்படும் ஊடகத்துறை ஒரு நாட்டின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவும் பயன்பட வேண்டும். அதனை உளத்தூய்மையோடும், நேர்மையாகவும், நெறிமுறை பிரளாமலும் பொறுப்புடன் பயன்படுத்தினால் நிச்சயமாக வெற்றியுண்டு. பொதுத் தொடர்பாடலை வளர்த்துக் கொள்வதுடன், மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் இருந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். உயர்மட்டங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கண்டுபிடித்து பொது மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது முக்கிய கடமையாகும். குறிப்பாக ஊடகவியலாளர்கள் எவரிடமும் விலை போகக்கூடாது. தன்னுடைய தகவல் மூலங்களை பாதுகாப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியுடன் செயற்படுதல் வேண்டும். அதேநேரம் சமகால விவகாரங்களை அறிந்திருத்தல் ஒரு ஊடகவியலாளருக்கு மிகவும் அவசியமாகும்.

சிறப்பு பேட்டியை எமக்கு வழங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் KM ரசூல் அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் நன்றிகளும் ,வாழ்த்துக்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!