தமிழ் ஊடகர்கள் தொடர்பில்
கனடாவின் கரிசனை தொடரும்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம்
உறுதியளித்தார் கனேடிய தூதுவர் வோல்ஸ்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தமிழ் ஊடகர் படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறவேண்டும் .அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களை வழங்க வேண்டுமென அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (30 ஆம் திகதி ) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தே .செந்தில்வேலவர் தலைமையிலான நிர்வாக குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு ,தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தூதுவருக்கு எடுத்துக்கூறினார்.
கடந்த காலங்களில் தமிழ் ஊடகர்கள் படுகொலை செய்யப்பட்டமை , அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை இதுவரை இடம்பெறாமை குறித்து இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள், அவற்றுக்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதுடன் அதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.
இப்போதும் தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது தொழிலை செய்யும்போது அரசியல் உட்பட்ட பல்வேறு தரப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் , புதிய ஆட்சியின் கீழும் இந்த நிலைமை தொடர்வதையும் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள் , மறைமுகமான சுய செய்தித் தணிக்கைக்கு ஊடகர்கள் பணிக்கப்படுகிறார்கள் என்றும் விபரித்தனர்.
தமிழ் ஊடகர்கள் தங்களின் தொழில்பயிற்சிக்கு கனேடிய அரசு இயன்றவரை உதவுமென இந்த சந்திப்பில் உயர்ஸ்தானிகர் வோல்ஸ் உறுதியளித்தார். அதேபோலன் தமிழ் ஊடகர்கள் தொழில் செய்யும்போது ஏற்படும் அவதானங்கள் தொடர்பில் கனடா தொடர்ந்தும் கரிசனை கொண்டிருக்கும் என்றும் அவர் இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.