நுவரெலியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான டயகம மண்ணினிள் இருந்து மலையக ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்த அறிவிப்பாளர் கந்தையா லங்கேஷ்வரனுக்கு கௌரவ விருது – 24 ஆண்டு சேவைக்கு உயர்ந்த அங்கீகாரம்
மலையக ஊடகத்துறையின் முன்னணி ஆளுமைகளில் ஒருவரான லங்கேஷ் அவர்களுக்கு “ஊடக துறை மற்றும் சமூக சேவை விபூசண் விருது” வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால ஊடக சேவை, கல்வி பங்களிப்பு மற்றும் சமூக செயற்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டயகம மண்னை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது ஹட்டனில் வசிக்கும் அறிவிப்பாளர் கந்தையா லங்கேஷ்வரன்
டயகம வெளிக்கள அதிகாரியாக இருந்த அமரர் கந்தையா.அமரர் மாயழகு அழகுராணி ஆகியோரின் அன்பு புதல்வரும்.
நு/ ஹால்புரூக் விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவர்ருமாவார்
மலையகத்தின் டயகம பகுதியைச் சேர்ந்த லங்கேஷ், இலங்கை வானொலி துறையில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்றி, தேசிய மற்றும் தனியார் வானொலி நிலையங்களில் முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (SLBC), Kandy FM, Uva FM, Sooriyan FM, Capital FM, Tamil FM, Varnam FM, Vettri FM, Vasantham FM, Thaalam FM, Star Tamil Radio உள்ளிட்ட பல ஊடகங்களில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் முகாமையாளர் என பல நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
அவரது குரலும் நிகழ்ச்சி வடிவமைப்பும் பல ஆண்டுகளாக இலட்சக்கணக்கான நேயர்களை சென்றடைந்ததுடன், குறிப்பாக சமூக உணர்வை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி நாடகங்கள் மூலம் மக்கள் மனங்களில் நிலைத்த இடம் பெற்றுள்ளது. யுத்த காலத்தில் “கனாக்காலம்” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் முகாம்களில் இருந்த பல குடும்பங்களை இணைத்து நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய சேவை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகத்துறையில் புதிய அறிவிப்பாளர்களை உருவாக்குவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் லங்கேஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது வழிகாட்டுதலால் உருவான பலர் இன்று தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கல்வித் துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் புலமைப்பரிசில் மாணவர்களை உயர்ந்த பெறுபேறுகளுக்கு கொண்டு சென்றதுடன், உயர்தர மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் மற்றும் ஊடகக் கல்வி கற்பித்துள்ளார். அவரது மாணவர்களில் பலர் இன்று பல்கலைக்கழகக் கல்வியில் முன்னேறி வருகின்றனர்.
சமூக சேவைகளிலும் அவர் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதுடன், கல்வி உதவிகள் மற்றும் சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
மேலும், முகாமைத்துவ பட்டம் பெற்றுள்ளதுடன், ஊடகம், மனித உரிமைகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான டிப்ளோமா கல்விகளையும் அவர் நிறைவு செய்துள்ளார். தற்போது மனித உரிமைகள் லங்கா அமைப்பில் ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
விருது பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த லங்கேஷ், இந்த அங்கீகாரம் தனிப்பட்ட பெருமையாக அல்லாது, தனது நீண்டகால உழைப்பு, சமூக பங்களிப்பு மற்றும் மலையகத்தில் இருந்து உருவான ஊடகப் பயணத்திற்கான அங்கீகாரமாகவே கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விருது, மலையக ஊடகத் துறையின் வளர்ச்சிக்கும், அதன் பங்களிப்பாளர்களின் தொடர்ச்சியான சேவைக்கும் கிடைத்த ஒரு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
மலையக சமூகத்தின் ஊடக, கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான தருணமாக இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
