பாராளுமன்றத்தில் வர்ஷ்னிக்கு புகழாரம் மலையகத்தின் பெருமை ஹன்சார்டில்

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது நுவரெலியா மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் வீ இராதாகிருஷ்ணன் மலையகத்தின் பெருமை தொடர்பான ஒரு விடயத்தை முன்வைத்தார்.

அது தான் ஊடக பரப்பில் நன்கு அறியப்பட்ட அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச் செயலாளரான கலாவர்ஷினி கனகரத்தினம் தொடர்பானது.

மலையகத்தை சேர்ந்த வர்ஷினியின் பெருமையை நாட்டை ஆளும் இடத்தில் இருந்து உலகம் முழுவதும் ஒலிக்க செய்த பாராளுமன்ற உறுப்பினர் வீ ராதாகிருஷ்ணன் அவர்களை நாம் பாராட்டுகிறோம்.

கலாவர்ஷ்னிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

சரி ஏன் , எதற்காக வர்ஷினிக்கு இந்த புகழாரம் என நாம் பார்ப்போம்

மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கொழும்பை தளமாகக் கொண்டு செயற்படும் கலாவர்ஷ்னி, கடந்த 2019ஆம் ஆண்டுவரை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் செய்தியாளர், செய்தி ஆசிரியர் மற்றும் செய்தி முகாமையாளர் என பல்வேறு பாத்திரங்களை வகித்துள்ளார். 2019ஆம் ஆண்டிற்கு பின்னர் சுயாதீன ஊடகவியலாளராகவும் ஊடக பயிற்றுவிப்பாளராகவும் பல்வேறு நிறுவனங்களுக்காக பணியாற்றுகின்றார். கடந்த 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கதை தயாரிப்புக்கான புலமைப்பரிசினை பெற்றுக்கொண்டதன் பின்னர், சுற்றுச்சூழல் தொடர்பான கதை தயாரிப்பு மாத்திரமன்றி, சூழலியல் கதைகளை மோஜோ (MOJO) ஊடாக வெளிப்படுத்துவது பற்றிய பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.

இது தொடர்பாக கலாவர்ஷ்னியிடம் கேட்டபோது, “உலகம் தற்போது உலக வெப்பமயமாதல் (Global Warming) மற்றும் உயிரியல் பல்வகைமை (Biodiversity) இழப்பு போன்ற கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் இக்காலத்தில், மனிதர்களையும் இயற்கையையும் இணைக்கும் பாலமாக கதை சொல்லல் மிக முக்கிய பங்காற்றுகிறது. Internews அமைப்பின் Earth Journalism Network (EJN) தொடங்கிய Earth Shorts திட்டத்தின் ஊடாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை குறுகிய காணொளிகள் மூலம் வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்க தயாரிப்பாளர்களையும் வழிநடத்துவது எனக்கு பெருமையாக உள்ளது. அதுவும் கடல்கடந்த தேசத்தில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக செயற்படுகையில், என்னை மேலும் செம்மைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

இன்றைய அதிவேக டிஜிட்டல் யுகத்தில் மக்கள் விரும்பும் பாணியில் உள்ளடக்கங்களை வழங்கும்போதுதான் அது விரைவாக சென்றடையும். அதற்கு சுருக்கமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கதை சொல்வது அவசியம். அதையுணர்ந்து, காலத்தின் தேவை கருதி Earth Journalism Network இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது” என்றார்.

அதேபோன்று, Earth Shorts என்ற திட்டத்தில் சுற்றுச்சூழல் கதைகளை தயாரிப்பதற்காக, இம்முறை இலங்கையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் கேஷாயினி எட்மண்ட் ஆவார். ஊடகத்துறையில் சுமார் 13 வருடங்கள் அனுபவம் வாய்ந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான கேஷாயினி எட்மண்ட், மல்டிமீடியா கதைகளை உருவாக்குதல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கையிடுதலில் தேர்ச்சிபெற்றவர்.

மனித-யானை மோதல், கடல் பாதுகாப்பு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் கதைகளை தயாரித்துள்ள கேஷாயினி, சிங்கப்பூரில் நோபல் பரிசு உரையாடல் (2023) போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆசியாவில் பால்நிலை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்தார். Climate Tracker மற்றும் DW Akademie ஊடாக சுற்றுச்சூழல் கதைசொல்லலில் பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

இத்திட்டத்தில் அடுத்து தெரிவாகியுள்ள ஊடகவியலாளர் தருஷி நேத்ரா வீரசிங்க. சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்படும் இவர், உள்ளடக்க உருவாக்குநராகவும் உள்ளார். அத்தோடு, பல்வேறு ஆவணப்படக் கதைகளையும் உருவாக்கியுள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த Earth Shorts திட்டத்திற்கான பொறுப்பாளரும் Earth Journalism Network (EJN) இன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான செயற்திட்ட முகாமையாளருமான Imelda Abaño, “ஊடகவியலாளர்களையும் உள்ளடக்க உருவாக்குநர்களையும் ஆதரிப்பது ஆசியாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அர்த்தமுள்ள உரையாடல்களை தூண்டவும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும். Earth Shorts செயற்திட்டத்தின் மூலம், புதுமையான டிஜிட்டல் நுட்பங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களைப் பயன்படுத்தி ஆர்வத்தை ஈர்க்கக்கூடிய காட்சிகளை உருவாக்கவும்வலுவான கதைகளை கூறவும் அவர்களுக்கு திறன்களை வழங்குவதே எமது நோக்கமாகும்.

சூழலியல் ஊடகவியலானது, பாரம்பரிய வடிவங்களை தாண்டி டிஜிட்டலுக்கு உகந்த, ஒருங்கிணைந்த மற்றும் எளிதில் அணுகக்கூடியதாக மாற வேண்டும் என நான் கருதுகின்றேன். பல்லுயிர் கதைசொல்லலை புதியதாய், காட்சி சார்ந்ததாய், மற்றும் எளிதில் பகிரக்கூடியதாக மாற்றுவதே எமது நோக்கம். அதே நேரத்தில், உள்ளடக்கம் துல்லியமானதாகவும், நம்பகத்தன்மையுடனும், அறிவியல் அடிப்படையிலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் மனித பரிமாணத்தை வெளிப்படுத்துவதை உறுதிசெய்வதே எமது குறிக்கோளாகும்” என்றார்.

Internews மற்றும் Internews Europeஆகியவற்றினால் 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Earth Journalism Network (EJN) என்பது உலகளாவிய ஊடகவியலாளர் வலையமைப்பாகும். இது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்கள் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை ஆழமாகவும் பொறுப்புடன் அறிக்கையிடவும் உதவுகிறது. ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், வளங்கள், நிதியுதவிகள் ஆகியவற்றை வழங்கி, உள்ளூர் ஊடகத்துறையை வலுப்படுத்துவதையும் அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புக்கூறச் செய்வதையும் EJN நோக்கமாகக் கொண்டுள்ளது.

“Earth Shorts” என்ற திட்டமானது முதலாவதாக கடந்த வருடம் பிலிப்பைன்ஸில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விஸ்தரித்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் 1ஆம் திகதியன்று நிகழ்நிலையில் இடம்பெற்றது. ஒருமாத கால பயிற்சியின் பின்னர், இவர்கள் சுற்றுச்சூழல் தொடர்புடைய கதைகளை தயாரிப்பாளர்கள். இவர்கள் தயாரிக்கும் கதைகள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற திட்டங்கள் மூலம் ஊடகவியலாளர்களும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வுகளை வலியுறுத்தும் பங்களிப்பை Earth Journalism Network (EJN)இன் Earth Shorts திட்டம் வழங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!