தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பயணக் கட்டுப்பாடுகளை ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் தொற்றுநோய் ஒழிப்பு விசேட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோதே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாளை அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி நாளை (25) ஆம் திகதி சில்லறை கடைகள், மருந்துக் கடைகள், மீன், இறைச்சி, மரக்கறி மற்றும் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட முடியும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தினங்களில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வர்த்தக நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.
பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் மற்றும் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான விற்பனை நிலையங்கள் முழுமையாக மூடப்படுதல் வேண்டும்.நாளைய தினம் (25) வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அடையாள அட்டைகளின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
எந்த காரணத்தினாலும் தனிப்பட்ட வாகனங்களில் நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களுக்கு செல்ல முடியாது. நாளை (25) இரவு 11.00 மணி முதல் மே மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை மீண்டும் முன்னர் போன்று பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மே மாதம் 31ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.மே 31ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.
ஜூன் 04 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஜூன் 04ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 07 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.
விமானப் படையினால் ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்து தினமும் கண்காணிக்கப்படும். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதை இலகுபடுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் நடமாடும் விற்பனை வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் குறித்து அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பு தகவல் சேவையாகவும் 1965 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும். பிரதேச மட்டத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடியாதிருக்கும் மரக்கறி அறுவடைகளை அரசாங்கத்தின் மூலம் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உண்மையாகவே அத்தியாவசிய சேவைகளுக்கானதா என்பதை கண்டறிவதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அழுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஸ்பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.