எதற்கும் பயப்படவேண்டாம் | நான் விலக மாட்டேன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் யாரும் எதற்கும் பயப்படவேண்டாம்.நான் விலக மாட்டேன் என்று உறுதியாக கூறினார்.

அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி மக்கள் மத்திக்கு சென்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக சுயாதீனமாக செயற்படுவது நெறிமுறைக்கு புறம்பானது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களினாலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பல அரசியல் அமைப்புகளினால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை தூண்டிவிட்டு செயற்படுத்தும் ஒன்று என சுட்டிக்காட்டிய குறித்த பிரதிநிதிகள், இந்த போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாக கூறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாவிட்டால் இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது என்றும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!